gopalan pti
இந்தியா

’எம்புரான்’ படத் தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.5 கோடி ரொக்கம் பறிமுதல்! யார் இந்த கோகுலம் கோபாலன்?

கோகுலம் சிட்ஃபண்ட்ஸ் தொடர்பான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ஒன்றரை கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

PT WEB

கோகுலம் சிட்ஃபண்ட்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2017ஆம் ஆண்டு கோகுலம் சிட்ஃபண்ட்ஸ் தொடர்பாக 78 கிளைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருந்தனர். அந்த சோதனையின் அடிப்படையில் பல்வேறு ஆவணங்கள் அமலாக்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, கோகுலம் சிட்ஃபண்ட்ஸ் நிறுவனரும் எம்புரான் திரைப்படத்தின் தயாரிப்பாளருமான கோகுலம் கோபாலனின் அலுவலகம் மற்றும் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அதோடு, கேரளாவில் உள்ள நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கப் பணமும், பல்வேறு முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகார் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ed raid

யார் இந்த கோபாலன்?

எம்புரான் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் கோபாலனுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்திய நிலையில், அவர் யார் என்பதை தற்போது பார்க்கலாம். 80 வயதான கோகுலம் கோபாலன், கேரளாவின் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த 50 ஆண்டுகளாக கல்வி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் சினிமா ஆகிய துறைகளில் கால்தடம் பதித்த இவர், ஸ்ரீகோகுலம் சிட் ஃபண்ட் நிதி நிறுவனத்தின் அதிபராக அனைவராலும் அறியப்படுகிறார்.1960-களில் சென்னைக்கு நடிகராக வேண்டும் என்ற கனவில் வந்த கோபாலன், பின்னர் நிதி நிறுவனம் தொடங்கி தொழிலதிபர் ஆனார். 2009-ஆம் ஆண்டு வெளியான மம்மூட்டியின் ’பழசிராஜா’ திரைப்படத்தை தயாரித்த இவர், தொலைக்காட்சி சேனல்களையும் நடத்தி வருகிறார்.