ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கு தொடர்பான முக்கிய ஆவணம், ப.சிதம்பரம் வீட்டில் கண்டெடுக்கப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2006-ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அப்போது ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ. 5,000 கோடியை முதலீடு செய்வதற்கு சட்ட விரோதமாக ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது. ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்தது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி ப.சிதம்பரம் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதையடுத்து கடந்த மாதம் 13ம் தேதி டெல்லி மற்றும் சென்னையில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் எந்தவிதமான ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை எனவும் ஒருசில காகிதங்களை மட்டுமே அமலாக்கத்துறையினர் எடுத்து சென்றனர் எனவும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ மூடி சீலிட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணம், ப. சிதம்பரம் வீட்டில் கண்டெடுக்கப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 13ஆம் தேதி டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டில் நடத்திய சோதனையின்போது இந்த ஆவணம் கிடைத்ததாக அமலாக்கத்துறை தகவல் தெரிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தனது வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையின்போது எந்த ஆவணமும் கிடைக்கவில்லை என்று ப.சிதம்பரம் தெரிவித்திருந்த நிலையில், அமலாக்கத்துறையை மேற்கோள்காட்டி ஏ.என்.ஐ. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.