உத்தரப்பிரதேசத்தில் மாயாவதிக்கு சொந்தமான 7 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். மாயாவதி ஆட்சிக்காலத்தில் நினைவிடங்கள் கட்டப்பட்டதில் ரூ.111 கோடி முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயாவதி, 1995ம் ஆண்டு முதல் பல முறை உத்தரப் பிரதேச முதலமைச்சராக இருந்துள்ளார். இருப்பினும், 2007 முதல் 2012 வரை முழுமையாக ஆட்சியில் இருந்தார். 2007-12 வரையிலான ஆட்சியின் போது, உத்தரப் பிரதேசத்தில் தலைநகர் லக்னோ, நொய்டா உள்ளிட்ட சில இடங்களில் நினைவிடங்கள், சிலைகள் மற்றும் பூங்காக்கள் அமைக்க மயாவதி தலைமையிலான அரசு ரூ2600 கோடி நிதி ஒதுக்கி இருந்தது.
இதில், பகுஜன் சமாஜ் அரசின் அமைச்சர்களான நஸ்மீதுனின் சித்திகியு, பாபு சிங் குஷ்வாஹா மற்றும் 12 எம்.எல்.ஏக்கள் நினைவிடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடாக பயன்படுத்துவதாக உத்தரப் பிரதேச லோக் ஆயுக்தா கூறியது. லோக் ஆயுக்தாவின் கருத்தினை வைத்து உத்தரபிரதேச ஊழல் தடுப்பு பிரிவு 2014இல் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது. 100 பொறியாளர்கள் உட்பட ஏராளமான அதிகாரிகள் மீது இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறையினர் மயாவதிக்கு சொந்தமான அலுவலகங்களில் இன்று சோதனை நடத்தியுள்ளனர். இந்த வழக்கில் நிலை என்ன ஆயிற்று என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கேள்வி எழுப்பி இருந்த நிலையில், இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் தலா 38 தொகுதியில் போட்டியிடப் போவதாக அகிலேஷ், மயாவதி தங்களது கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். கூட்டணி அறிவித்த போது, கனிமவள முறைகேடு புகார் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவிற்கு சொந்தமான வீடுகளில் சமீபத்தில் சோதனைகள் நடத்தப்பட்டது. அப்போது, விசாரணையை சந்திக்க தயார் என்று அகிலேஷ் கூறியிருந்தார். தற்போது, மாயாவது சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.