இந்தியா

பொருளாதார ஆய்வறிக்கையில் புதிய அம்சம்: சாமானிய குடும்பத்தின் உணவுக்கான செலவு விவரங்கள்..!

பொருளாதார ஆய்வறிக்கையில் புதிய அம்சம்: சாமானிய குடும்பத்தின் உணவுக்கான செலவு விவரங்கள்..!

webteam

பொருளாதார ஆய்வறிக்கையில் முதல்முறையாக ஃபுல் மீல்ஸ் விலை குறித்த புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாதாரண மனிதன் சைவ மற்றும் அசைவ உணவுக்காக ஓராண்டுக்கு செலவழிக்கும் தொகை குறித்த விவரங்கள் இந்த உணவுப் பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பொருளாதார ஆய்வறிக்கையில் ஒரு சாமானிய குடும்பம் உணவுக்காக ஆண்டுதோறும் எவ்வளவு ரூபாய் செலவிடுகிறது என்ற புதிய அம்சம் சேர்க்கப்பட்டிருக்கிறது. அதன்படி சைவ உணவுக்கான சாதாரண குடும்பத்தின் செலவு 2015 முதல் நாடு முழுவதும் குறைந்திருப்பதாகவும், இதன் மூலம் சைவ உணவு சாப்பிடும் ஒரு குடும்பம் ஆண்டுதோறும் 11 ஆயிரம் ரூபாய் வரை மிச்சம் பிடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அசைவ உணவு சாப்பிடும் ஒரு குடும்பம் ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வரை மிச்சப்படுத்தி இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இதேபோல் நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வில் சைவ உணவுக்காக ஒரு குடும்பம் செலவிடும் தொகை 29 சதவிகிதம் வரை முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும், அசைவ உணவை பொருத்தவரை இந்த முன்னேற்றம் 18 சதவிகிதமாக இருக்கிறது என்றும் தெரியவந்திருக்கிறது.

கடந்த 2006 ஏப்ரல் முதல் 2019 அக்டோபர் வரை நுகர்வு விலை குறியீட்டின் அடிப்படையில் தொழிற்சாலை ஊழியர்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இந்த ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்பின்படி 2015-ஆம் நிதியாண்டு முதல் ஒரு குடும்பத்திற்கான உணவு செலவு குறைந்திருந்தாலும், நடப்பு நிதியாண்டில் உணவுக்காக செலவிடும் தொகை சற்று உயர்ந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.

அதன்படி தமிழகத்தில் 2006-07 ஆம் ஆண்டில் சைவ உணவுக்காக 10 ரூபாய் செலவிடப்பட்ட நிலையில், அதன் விலையில் 2016-ஆம் ஆண்டு வரை ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. கடைசியாக 2018-19-ஆம் ஆண்டில் 22 ரூபாய் வரை செலவிடப்பட்ட நிலையில், 2019-20 ஆம் ஆண்டில் 25 ரூபாய் வரை எட்டியிருக்கிறது.

பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்களுக்கு இடையிலான ஒற்றுமையை விளக்குவதற்காக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தோசாநாமிக்ஸ் என்ற பெயரை பயன்படுத்தினார். அதை அடியொற்றி அவரது சீடரான பொருளாதார நிபுணர் சுப்ரமணியன் தாலிநாமிக்ஸ் என்ற பெயரில் சாமான்ய மனிதர்களின் உணவுச் செலவை இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் சேர்த்துள்ளார்.