இந்தியா

5 மாநில தேர்தல்: சுகாதாரத்துறை செயலாளருடன் இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

நிவேதா ஜெகராஜா

கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலை நடத்துவது தொடர்பாக இன்று சுகாதாரத்துறை செயலாளருடன் ஆலோசனை நடத்துகிறது இந்திய தேர்தல் ஆணையம்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதத்தில் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் கால அவகாசம் முடிவடைவதால் அங்கெல்லாம் விரைந்து தேர்தலை கட்டாயம் நடத்த வேண்டியுள்ளது. இதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தலைமையில் 13 பேர் கொண்ட குழு பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு சென்று தேர்தல் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இவற்றை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் அவர்கள் உத்தர பிரதேச மாநிலத்திற்கு சென்றும் ஆய்வு நடத்த உள்ளனர்.


இதற்கிடையில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேர்தலை தள்ளி வைப்பது தொடர்பாக பரிசீலிக்குமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை தேர்தல் ஆணையத்தையும் பிரதமர் அலுவலகத்தையும் கேட்டுக்கொண்டிருந்தது. இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை விளக்கம் அளித்த தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, உ.பி மாநிலத்தில் ஆய்வு செய்த பின்னர் இவை குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறியிருந்தார். ஆகவே அதுதொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தேர்தலை நடத்துவதில் உள்ள சுகாதார கட்டமைப்பு சூழல் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் முக்கிய அதிகாரிகள் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷனை இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

தேர்தல் பரப்புரைகளில் அதிக அளவில் கூட்டம் கூடுவதால் வைரஸ் பரவல் அதிகரிக்கும் என்றும், அதனால் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கைப்பட்டு வருகிறது. இதை கருத்தில்கொண்டு நிலையில் தேர்தலை பாதுகாப்பான முறையில் நடத்துவது தொடர்பாகவும், கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.