நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமாரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
வரும் 11ஆம் தேதி நாடாளுமன்ற முதற்கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி வெளியானது. அன்று முதல் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனால் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினால் அவர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் தேர்தல் ஆணையம் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமாரை எச்சரித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் ராஜீவ் குமாருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளது. அதில் “தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி அரசு அதிகாரிகள் தேர்தல் காலங்களில் சீராக நடக்கவேண்டும்.
அத்துடன் நேர்மையான தேர்தல் நடைபெறுவதற்கு தடையாக எந்தவொரு விஷயங்களிலும் ஈடுபடக் கூடாது. மேலும் அரசு அதிகாரிகள் பொதுவழியில் கருத்துக்கள் தெரிவிக்கும் போதும் எந்தவித பாரபட்சமும் இன்றி கருத்துக்கள் தெரிவிக்கவேண்டும். ராஜீவ் குமார் காங்கிரஸ் கட்சியின் குறைந்தபட்ச வருமான திட்டத்தை விமர்சித்ததன் மூலம் இந்த நடத்தை வீதிமுறைகளை மீறியுள்ளார். எனினும் வரும்காலத்தில் இந்தத் தவறை தொடர மாட்டீர்கள் என்று நம்புகிறோம்” எனச் எச்சரித்துள்ளது.
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி அறிவித்த குறைந்தபட்ச வருமான திட்டம் குறித்து ராஜீவ் குமார் கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து மார்ச் 27ஆம் தேதி தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டிருந்தது. அதற்கு விளக்கம் அளித்த ராஜீவ் குமார், “நான் ஒரு பொருளாதார அறிஞராக கருத்து தெரிவித்தேன்” எனக் கூறியிருந்தார்.