தேர்தல் ஆணையம் நோட்டீஸ் x page
இந்தியா

பிஹார்: வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள்.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்

வாக்குத் திருட்டு விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சரமாரியாக கேள்விகளை எழுப்பி வரும் நிலையில், பிஹாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

PT WEB

வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள், வாக்குத் திருட்டு விவகாரத்தை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் தலைமை தேர்தல் ஆணையம் மறுத்ததுடன், ராகுல்காந்தி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணையம் தனது அரசமைப்பு கடமையை விட்டுக்கொடுத்துவிட்டதாக குற்றம்சாட்டியதுடன், ஜனநாயகத்தை நசுக்கும் எந்தவொரு முயற்சியையும் இந்தியா கூட்டணி எதிர்க்கும் என முழக்கமிட்டனர்.

ராகுல் காந்தி

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக யாரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்ற தேர்தல் ஆணையம் குற்றச்சாட்டை அகிலேஷ் யாதவ் மறுத்ததுடன், தான் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் நகலை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், பிஹாரில் வாக்குரிமை யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி 2ஆவது நாளாக பேரணி சென்றார். அவுரங்காபாத்துக்கு சென்ற ராகுலுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய ராகுல், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்ற நடைமுறை வாக்குத் திருட்டின் புதிய ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாக விமர்சித்தார். ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற உறுதிமொழியை பாதுகாப்பதே தனது இலட்சியம் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம்

பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடவடிக்கைக்கு பின் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நீக்கப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் நீக்கத்திற்கான காரணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 36 லட்சத்து 28 ஆயிரம் பேர் நிரந்தரமாக இடம் பெயர்ந்துவிட்டார்கள் எனக்கூறப்பட்டுள்ளது. 22 லட்சத்து 34 ஆயிரம் பெயர்கள் இறந்துவிட்டடதாகவும், 7 லட்சம் பேர் ஒரு இடத்திற்கு மேல் வாக்குரிமை வைத்துள்ளதாகவும் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.