IIT director
IIT director pt web
இந்தியா

“இறைச்சி சாப்பிடுவதால் தான் இயற்கை பேரிடர் ஏற்படுகிறது”- ஐஐடி இயக்குநரின் பேச்சுக்கு காங். கண்டனம்

Angeshwar G

இறைச்சி சாப்பிடுவதால் தான் இமாச்சலப் பிரதேசத்தில் இயற்கை பேரிடர்கள் நிகழ்வதாக ஐஐடி மண்டி இயக்குநர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹிமாச்சல பிரதேசத்தில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐஐடி மண்டி இயக்குநர் லக்‌ஷ்மிதார் பெஹாரா தனது மாணவர்களை இறைச்சி சாப்பிடுவதை நிறுத்துமாறு கூறியுள்ளார். வளர்ப்புப் பிராணிகளை கொடூரமாக கொன்று அதன் இறைச்சிகளை உண்பதால் தான் மீண்டும் மீண்டும் இமாச்சலப் பிரதேசத்தில் இயற்கை பேரிடர்கள் ஏற்படுவதாக தெரிவிர்த்துள்ளார். காணொளி வாயிலாக அவர் ஆற்றிய உரை சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாட்டின் உயரிய கல்வி நிறுவனத்தில் அவர் பணியாற்றும் தகுதியை அவர் இழந்துவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து பகிர்ந்திருக்கும் ஜெய்ராம் ரமேஷ், “ஐஐடி மண்டி இயக்குநராக அவர் தொடர்ந்து பணியாற்றினால் அறிவியலை அறிந்துகொள்ள படிக்க வரும் மாணவர்களின் ஆர்வத்தை சிதைத்துவிடும்” என்றும் தெரிவித்துள்ளார்.