ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்க இனி நீண்ட வரிசையில் வியர்த்து விறுவிறுக்க காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மொபைல் செயலி மூலம் டிக்கெட்டை பதிவு செய்து விட்டு, நேரடியாக பயணத்தை தொடரலாம். அதற்கான புதிய வசதியை ரயில்வே துறை இவ்வார இறுதிக்குள் அறிமுகம் செய்கிறது.
வடகிழக்கு மாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி தமிழகம் மற்றும் கேரளாவை நோக்கி பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் தென் தமிழகத்தில் இருந்து வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணிப்போரின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளிலேயே பயணிக்கின்றனர்.
இதனால் கடைசி நேரத்தில் வியர்த்து விறுவிறுக்க நீண்ட வரிசையில் காத்திருந்து முன்பதிவு இல்லாத டிக்கெட்டை வாங்கும் நிலை உள்ளது. பயணிகளின் இந்த கடைசி நேர பரபரப்பை குறைக்கும் வகையில் மொபைல் செயலி மூலமே முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டை பெற்று பயணிக்கும் புதிய வசதி அறிமுகமாகவுள்ளது. இவ்வார இறுதிக்குள் அறிமுகமாகும் இந்த செயலி மூலம் முன்பதிவு செய்யும்போது, டிக்கெட்டை பிரின்ட் எடுக்க வேண்டிய அவசியமும் இருக்காது. இதனால் ரயில் பயணிகளுக்கு இவ்வசதி வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.