இன்று காலையில் (22.7.2025) ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
தேசிய நில அதிர்வு மையத்தின் கூற்றுப்படி காலை 6 மணிக்கு 3.2 என்ற ரிக்டர் அளவு கோளில் லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. டெல்லி மற்றும் அதன் சில பகுதிகளில் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஹிரியானாவில் ஏற்பட்டுள்ளது. இது 5 கி.மீ ஆழத்தில் உருவாகியுள்ளது.
நிலநடுக்கத்தின் ஆயத்தொலைவுகள் 28.29° வடக்கு அட்சரேகை மற்றும் 72.21° கிழக்கு தீர்க்கரேகையில் பதிவாகியுள்ளன. நிலநடுக்கம் லேசானதாக இருந்தாலும், ஆழம் குறைவாக இருந்ததால் டெல்லி, நொய்டா, குருகிராம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே பல குடியிருப்பாளர்கள் இதுகுறித்தான தகவல்களை தங்களது சமூக வலைதளக்கணக்குகளில் பதிவிட்டு அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், இந்த நிலநடுக்கத்தால் எந்த வித ஆபத்தோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை என்றும், எனவே மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக , ஜூலை 21 ஆம் தேதி அதிகாலையில் ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதில் உயிர் சேதம் அல்லது பொருட்சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை . கடந்த சில வாரங்களாக, டெல்லி பகுதியில் தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன, இது குடியிருப்பாளர்களிடையே கவலையை அதிகரித்து வருகிறது.
ஜூலை 10ம் தேதி காலை 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மறுநாள் மாலை 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இவை இரண்டும் டெல்லி-என்சிஆர் மற்றும் குருகிராம், ரோஹ்தக் மற்றும் நொய்டா போன்ற அண்டை மாவட்டங்களில் வலுவாக உணரப்பட்டன.