இந்தியா

கர்நாடகாவில் நிலநடுக்கம் - மக்கள் அலறியடித்து ஓட்டம்

ஜா. ஜாக்சன் சிங்

கர்நாடகாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் வீட்டில் இருந்து அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 3.4 ஆக பதிவானது. ஹாசன் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அதேபோல, குடகு மாவட்டத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள், வீட்டில் இருந்து அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். சுமார் 1 நிமிடத்துக்கு இந்த நிலநடுக்கம் நீடித்தது. உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படாத போதிலும், பல வீடுகள் சேதமடைந்தன.

இதுகுறித்து கர்நாடகா பேரிடர் மேலாண்மை ஆணையர் மனோஜ் ராஜன் கூறுகையில், "இது லேசான நிலநடுக்கம்தான். இதனால் ஹாசன், குடகு மாவட்டங்களில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஹாசன் மாவட்டத்தின் மலுங்கஹள்ளி கிராமத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்படடிருக்கிறது. மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை" என்றார்.