இந்தியா

"வாரிசு அரசியல் முதல் சீக்கியப் படுகொலை வரை" - காங்கிரஸை கடுமையாக சாடிய பிரதமர் மோடி

Veeramani

காங்கிரஸ் கட்சி இல்லையென்றால் வாரிசு அரசியல் இருந்திருக்காது, வாரிசு அரசியலால் ஜனநாயகத்திற்கு ஆபத்து, வாரிசு அரசியலால் திறமை புறக்கணிக்கப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் இல்லாவிட்டால், அவசரநிலை பிரகடனம் , ஊழல், சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், காஷ்மீரி பண்டிட்களின் வெளியேற்றம் போன்றவை நடந்திருக்காது. பெண்களின் பாதுகாப்பு, மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைத்திருக்கும் என்று கூறினார்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி,“காங்கிரஸ் இந்தியாவின் அடித்தளத்தை அமைத்தது என்றும் பாஜக கொடியை ஏற்றியது என்றும் அவையில் கூறப்பட்டது. இது சபையில் நகைச்சுவையாகச் சொல்லப்படவில்லை. இது தேசத்திற்கு ஆபத்தான தீவிர சிந்தனையின் விளைவு. இந்தியா 1947 இல் பிறந்தது என்று சிலர் நம்புகிறார்கள், இந்த சிந்தனையால்தான் பிரச்சனைகள் எழுகின்றன. கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியாளர்களின் கொள்கைகளில் இந்த மனநிலை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது வக்கிரங்களைப் பிறப்பித்தது. இந்த ஜனநாயகம் உங்கள் பெருந்தன்மையால் கிடைக்கவில்லை.1975ல் ஜனநாயகத்தை கழுத்தை நெரித்தவர்கள் இதுபற்றி பேசக்கூடாது" என தெரிவித்தார்

மேலும், "வாரிசு அரசியலால் ஜனநாயகத்திற்கு ஆபத்து, வாரிசு அரசியலால் திறமை புறக்கணிக்கப்படுகிறது, காங்கிரஸ் இல்லையெனில் வாரிசு அரசியல் இருந்திருக்காது, காங்கிரஸ் இல்லையெனில் ஊழல் இருந்திருக்காது, எமர்ஜென்சி இருந்திருக்காது.

காங்கிரஸ் கட்சியின் பெயரை பெடரேஷன் ஆப் ஸ்டேட் காங்கிரஸ் என மாற்றிக்கொள்ளுங்கள், தேசம் என்பது மாநிலங்களின் ஒருங்கிணைந்த உருவமே. தமிழகத்தில் எமர்ஜென்சி நேரத்தில் கருணாநிதி அரசை மத்திய காங்கிரஸ் அரசு டிஸ்மிஸ் செய்தது. தமிழகத்தில் எம்ஜிஆர் தலைமையிலான அரசையும், காங்கிரஸ் அரசு டிஸ்மிஸ் செய்தது. மாநிலங்களின் உரிமை குறித்து பேசும் காங்கிரஸ் கட்சி பல மாநில முதல்வர்களை பதவியிலிருந்து நீக்கியது. நான் குஜராத் முதல்வராக இருந்தபோது மத்திய காங்கிரஸ் அரசு தொடர்ந்து நெருக்கடிகளை அளித்தது" என தெரிவித்தார்,