இந்தியா

முடியாமல் சிறுநீர் கழித்தவருக்கு கேரளாவில் நடந்த கொடூரம்: மனிதநேயம் மரணித்தது..!

முடியாமல் சிறுநீர் கழித்தவருக்கு கேரளாவில் நடந்த கொடூரம்: மனிதநேயம் மரணித்தது..!

Rasus

ஆம்புலன்சில் சிறுநீர் கழித்துவிட்டார் என்பதற்காக விபத்தில் சிக்கியவரை வண்டியில் இருந்து அதன் ஓட்டுநர் வெளியே தள்ளிவிட்ட அதிர்ச்சி சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

கேரளா மாநிலம் பாலக்காடு அருகே கடந்த 20ம் தேதி நடுத்தர வயது இளைஞர் ஒருவர் சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்தில் சிக்கினார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை பக்கத்திலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அந்த நபரை பாலக்காட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதன்பேரில் அந்த நபர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் ஆம்புலன்ஸில் அவர் தெரியாமல் தன்னை மறந்து சிறுநீர் கழித்திருக்கிறார். மேலும் ஆம்புலன்ஸிலே வாந்தியும் எடுத்து விட்டார். ஆம்புலன்ஸ் டிரைவர் அவரை கீழே இறக்கலாம் என பார்த்தபோது வாந்தியும், சிறுநீர் கழித்ததும் தெரியவருகிறது. இதனால் ஆம்புலன்ஸ் டிரைவருக்கு கடுமையான ஆத்திரம் ஏற்படுகிறது. மருத்துவமனையில் இருந்து சக்கர நாற்காலி வருவதற்குள் விபத்தில் சிக்கியவரை ஆம்புலன்சில் இருந்து கீழே தள்ளிவிடுகிறார் அதன் டிரைவர். இதனால் அந்த நபர் ஸ்ட்ரச்சரோடு தலைகீழாக கீழே சாய்கிறார். இதனை அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அப்போது ஆம்புலன்ஸ் டிரைவர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனையடுத்து விபத்தில் சிக்கியர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனையடுத்து போலீசார் அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் கேரள மாநிலம் பாலக்காடு அருகே அரசி திருடியதற்காக பழங்குடி இன இளைஞரான மது அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது மனித நேயம் தொடர்பான கேள்வியை எழுப்பியது. இந்நிலையில் சிறுநீர் கழித்துவிட்டார் என்பதற்காக மனித நேயமற்று ஆம்புலன்ஸில் இருந்து இளைஞர் தள்ளிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.