இந்தியா

அவர் இங்க படிக்கவே இல்லையே : அதிர்ச்சி கொடுத்த திருவள்ளூர் பல்கலைக்கழகம்

அவர் இங்க படிக்கவே இல்லையே : அதிர்ச்சி கொடுத்த திருவள்ளூர் பல்கலைக்கழகம்

webteam

டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தேர்தலில் தலைவராக வென்ற ஏபிவிபி அமைப்பு மாணவரின் சான்றிதழ் போலியானது தான் என தமிழகத்தின் உயர்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

டெல்லி பல்கலைக் கழகத்திற்கு நடைபெற்ற மாணவர் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஏபிவிபி மாணவர் அமைப்பினர் தலைவர், துணைத் தலைவர், இணைச் செயலாளர் பதவிகளை வென்றனர். காங்கிரஸ் கட்சியின் தேசிய மாணவர் சங்கம் அமைப்பினர் செயலாளர் பதவியில் மட்டும் வெற்றி பெற்றனர். இதையடுத்து வாக்கு இயந்திரங்களில் மோசடி செய்ததாக காங்கிரஸ் தரப்பினர் குற்றம்சாட்டினர். அத்துடன் மாணவர் சங்கத் தலைவராக வெற்றி பெற்ற அங்கிவ் பாய்சொயா போலிச் சான்றிதழ் கொடுத்து தனது முதுகலைப்படிப்பை, டெல்லி பல்கலைக்கழத்தில் தொடர்வதாக குற்றம்சாட்டினர்.

இதற்கு ஏபிவிபி மாணவர் அமைப்பு மறுப்பு தெரிவித்தது. அத்துடன் காங்கிரஸ் மாணவர்கள் வதந்தி பரப்புவதாக அங்கிவ் குற்றம்சாட்டினார். ஆனால், காங்கிரஸ் மாணவர் அமைப்பின் கூட்டணி மாணவர் அமைப்பான தேசிய மாணவர் சங்கத்தினர், திருவள்ளூர் பல்கலைகழத்தின் சார்பில் வெளியிடப்பட்டதாக ஒரு சான்றிதழ் நகலை வெளியிட்டனர். அதில் அங்கிவ் பாய்சொயா என்பவருக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் போலியானது எனக் குறிப்பிட்டிருந்தனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அங்கிவ் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் புத்தீஸ்ஸம் படித்ததாக கூறப்படும் சான்றிதழ் போலியானது தான் என தமிழக உயர்கல்வித்துறையின், மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அதிகாரி கூறும்போது, “எங்கள் பல்கலைக்கழகத்தில் அங்கிவ் படித்ததாக சமர்பிக்கப்பட்டுள்ள சான்றிதழின் பதிவு எண் பொய்யானது. எங்கள் மாநிலத்தின் வேறு எந்த கல்வி நிறுவனத்திலோ அல்லது கல்லூரிகளிலோ, அவர் மாணவராக பயிலவில்லை. அவர் சமர்பித்த சான்றிதழ் எங்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து வழங்கப்பட்டது அல்ல. அது போலியானது. எங்கள் தேர்வு மையக்கட்டுப்பாட்டு அதிகாரி அந்த சான்றிதழ் போலியானது என கடிதம் எழுதியுள்ளார். சான்றிதழை சோதித்த பின்னர் இதை அவர் தெரிவித்துள்ளார்” என்று தெரிவித்தார்.