டெல்லியை கடுமையாக தாக்கிய புழுதிப்புயல் காரணமாக நடுவானில் 227 பேருடன் சென்ற இண்டிகோ விமானம் சேதமடைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தலைநகர் டெல்லி முதல் நொய்டா , காசியாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புழுதிப்புயல் வீசிவருகிறது. அதோடு, பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
இந்நிலையில், டெல்லியில் நேற்று இரவு 8 மணியளவில் திடீரென புழுதிப் புயலுடன் கனமழை பெய்ய தொடங்கியது. மணிக்கு 70 முதல் 79 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால், டெல்லி கோல் மார்க்கெட், லோடி உள்ளிட்ட ஆலங்கட்டி மழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். புழுதிப் புயல், கனமழை காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, டெல்லியில் நேற்று மாலை 5 மணியளவில் ஸ்ரீநகர் நோக்கி இண்டிகோ நிறுவனத்தில் விமானம் (6E 2142) கிளம்பியது. மோசமான வானிலை நிலவியதால் விமானிகள் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், நடுவானில் ஆலங்கட்டி புயலை சந்தித்தது இந்தவிமானம் .
எனினும் விமானியின் சாமர்த்தியத்தால் 227 பயணிகளுடன் விமானம் பாதுகாப்புடன் ஸ்ரீநகரில் மாலை 6.46 மணிக்கு தரையிறக்கப்பட்டது. இதில் விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. ஆபத்தான வகையில் விமானம் குலுங்கியதாக பயணிகள் தெரிவித்தனர். இந்நிலையில்,இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க இண்டிகோ உத்தரவிட்டுள்ளது.