இந்தியா

ட்விட்டர் மீது பகீர் குற்றச்சாட்டை முன்வைத்த ராகுல்காந்தி: பதிலளித்த ட்விட்டர்

EllusamyKarthik

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான ராகுல் காந்தி கடந்த டிசம்பரில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வாலுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் இந்தியாவை ஆட்சி செய்து வரும் மோடி தலைமையிலான அரசு கொடுக்கும் அழுத்தம் காரணமாக ட்விட்டர், தன்னை பின்தொடர்பவர்களை கட்டுப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு வைத்திருந்தார். 

மாதத்திற்கு 2 லட்சம் ஃபாலோயர்கள் என இருந்த எண்ணிக்கையை கடந்த 2021 ஆகஸ்ட் முதல் வெறும் 2,500 என்ற எண்ணிக்கையில் மாறி இருப்பதாகவும் அவர் சொல்லியிருந்தார். தனது ஃபாலோயர்கள் எண்ணிக்கை 19.5 மில்லியனில் அப்படியே நிலைத்து நிற்பதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 

“ட்விட்டர் தளத்தில் ஃபாலோயர்களின் கவுண்ட் குறித்த விவரத்தை அனைவரும் கண்கூடாக பார்க்கும் அம்சம் உள்ளது. அது துல்லியமானது என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருக்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். ஒருபோதும் ட்விட்டர் தளம் தன்னிச்சையாக கையாளப்படாது. ஃபாலோயர்களின் எண்ணிக்கையில் ஏற்றம், இறக்கம் இருக்கலாம்” என அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆகஸ்ட் மாதம் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை 8 நாட்கள் முடக்கம் செய்திருந்தது ட்விட்டர். டெல்லியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரின் புகைப்படத்தை அவர் பகிர்ந்ததால் ட்விட்டர் அவரது கணக்கை முடக்கியிருந்தது.