மத்தியப் பிரதேசத்தில் பணி நேரம் முடிந்து விட்டதாகக் கூறி சரக்கு ரயிலை நடுவழியில் நிறுத்திவிட்டு ஓட்டுநர் இறங்கிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற ரயில்கள் வழி மாற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் இங்குள்ள குவாலியரில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சிக்கு சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. ததியா என்ற இடத்தில் அந்த ரயில் வந்தபோது, அதே வழித்தடத்தில் மற்றொரு சரக்கு ரயில் நின்று கொண்டிருந்தது. இதனால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் பாதையில் ஜான்சிக்கு செல்லும் அந்த சரக்கு ரயிலை ரயில்வே ஊழியர்கள் திருப்பி விட்டனர்.
இதற்கிடையில் சிறிது தூரம் சென்ற சரக்கு ரயில் திடீரென நடு வழியில் நின்றதைக் கண்டு ஊழியர்கள் பதறினர். அது முக்கியமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் தடம் என்பதால் ரயில் சேவை பாதிக்கும் என அந்த ரயிலை நோக்கி சென்றனர்.
இதற்கிடையில் ஜான்சிக்கு செல்லும் ரயிலை ஓட்டி வந்த டிரைவர் தனது பணிநேரம் முடிந்து விட்டதாகக் கூறி அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டு சென்றிருந்தார். இதனால் நட்ட நடு வழியில் ஜான்சி செல்லும் சரக்கு ரயில் அப்படியே நின்றது. இதனால் அவ்வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் பாதி வழியில் நிறுத்தப்பட்டன. தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரயிலை சோதனையிட்டனர். உடனடியாக மாற்று டிரைவரை அனுப்பி ரயிலை வேறொரு தடத்திற்கு மாற்றி கொண்டு வந்து நிறுத்தினர். இதன் பின்னர் தான் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து சீரானது. ரயில்கள் மாற்றிவிடப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.