நாடு முழுவதும் போதையில் வாகனம் ஓட்டி, விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் குஜராத்திலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் இளைஞர் ஒருவர் குடிபோதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டார். மூன்று பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நேற்று இரவு வதோதராவில் அம்ரபாலி வளாகம் அருகே வேகமாக காரில் வந்துகொண்டிருந்தபோது அவ்வழியே பெண் ஒருவர் ஓட்டிவந்த ஸ்கூட்டரின்மீது அந்த கார் இடித்துள்ளது.
மேலும் 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் வழிபோக்கர்கள் மீதும் மோதியுள்ளது. இந்த விபத்தில் ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இதில் 1 குழந்தை உட்பட 4 பேர் வரை காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்து வெளியே இறங்கி வந்த ஓட்டுநர், "இன்னொரு ரவுண்ட்", "ஓம் நமசிவாய" என்று உச்சக் குரலில் கத்தத் தொடங்கினார். பின்னர் தப்பியோட முயன்ற அவரை அங்கிருந்த மக்கள் பிடித்து அடித்துள்ளனர். பின்னர் இதுகுறித்து விவரமறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அந்த ஓட்டுநரை கைதுசெய்து அழைத்துச்சென்றனர். அவர் போதையில் இருந்ததாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.