இந்தியா

எரிந்து கொண்டிருந்த வட்டாட்சியரை காப்பாற்ற முயன்ற டிரைவர் உயிரிழப்பு

எரிந்து கொண்டிருந்த வட்டாட்சியரை காப்பாற்ற முயன்ற டிரைவர் உயிரிழப்பு

webteam

தெலங்கானாவில் அலுவலகத்தில் வைத்து வட்டாட்சியர் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அவரை காப்பாற்ற முயன்ற டிரைவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தின் அப்துல்லாபர்மெத் கிராமத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியராக இருந்தவர் விஜயா. இவரை  அலுவலகத்தில் வைத்தே சுரேஷ் என்பவர் பெட்ரோல் ஊற்றி உயிருடன் நேற்று எரித்தார். இதைக்கண்ட பணியில் இருந்தவர்கள் வட்டாட்சியரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் எரிந்து கொண்டிருந்த வட்டாட்சியர் உடல் கருகி உயிரிழந்தார். 

அங்கிருந்து தப்பிச்சென்ற சுரேஷ், ஹயாத்நகர் காவல்நிலையம் அருகே பிடிபட்டார். அவரது கையில் தீக்காயங்கள் இருந்தன. அவரை கைது செய்த போலீஸார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தனது இடம் தொடர்பான பிரச்னையில் அநீதி இழைக்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே வட்டாட்சியரை எரித்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

(உயிரிழந்த டிரைவர் குருநந்தம்)

இந்நிலையில், வட்டாட்சியரை காப்பாற்ற முயன்ற டிரைவர் குருநந்தம் 80 சதவிகித தீ காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். வட்டாட்சியர் மீது தீ பற்றி எரிந்து கொண்டிருந்த போது அவரை காப்பாற்ற குருநந்தம் முயன்றுள்ளார். எனினும் அவரால் காப்பாற்ற முடியவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு 8 மாத கர்ப்பிணி மனைவியும், 2 வயது மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.