பிரதிமா படுகொலை
பிரதிமா படுகொலை ஃபேஸ்புக்
இந்தியா

கர்நாடக அரசு பெண் அதிகாரி படுகொலை வழக்கில் ஓட்டுநர் கைது! வழக்கில் அதிர்ச்சி திருப்பம்!

ஜெனிட்டா ரோஸ்லின்

கர்நாடக மாநில சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் அதிகாரியாக இருந்தவர் பிரதிமா. இவரின் சொந்த ஊர் கர்நாடகா மாநிலத்தின் ஷிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள தீர்த்தஹள்ளி என்னும் கிராமம். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும் இருக்கிறார். குடும்ப பிரச்னை காரணமாக பெங்களூருவில் வசித்து வருகிறார் பிரதிமா. நேர்மையான அதிகாரியான இவர் சட்ட விரோதமாக செயல்பட்ட சுரங்கங்களுக்கு சீல் வைத்து தன் பணியை திறம்பட செய்த அதிகாரி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதிமா படுகொலை

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இவரின் அண்ணன் பிரதீஷ் அலைபேசியில் இவரை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். அப்போது பிரதிமா அழைப்பை எடுக்காததால் அடுத்தநாள் காலையில் அவரை காண அவரின் வீட்டிற்கே சென்றுள்ளார் பிரதீஷ்.

அங்கு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார் பிரதீமா. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பிரதீஷ், உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடனடியாக பிரதிமாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இவரின் படுகொலை குறித்து பல்வேறு கோணங்களில் ஆராய்ந்தனர். அவ்வகையில் ‘முறைகேடாக நடைபெற்ற சுரங்கங்களுக்கு தடை விதித்த அதிகாரி என்பதால் ஒருவேளை அதில் தொடர்புடைய யாராவது இவரை கொலை செய்தார்களா?’ என்ற கோணத்திலும் விசாரனையானது தொடரப்பட்டது.

இதன் அடிப்படையில் பிரதிமாவிடம் ஓட்டுநராக பணிபுரிந்த கிரண் என்பவருக்கும் இவருக்கும் இடையே மோதல் என்பது தெரிய வந்தது. எனவே சந்தேகத்தின் பேரில் தனிப்படை அமைத்து அவரை போலீசார் தேடி கண்டுபிடித்து விசாரித்துள்ளனர்.

கிரண்

அப்போது கிரண், தான் அங்கு 5 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றியவர் என்றும், கடந்த 10 நாட்களுக்கு முன்பு பிரதிமா தன்னை பணியில் இருந்து நீக்கிவிட்டாரென்றும் தெரிவித்துள்ளார்.

இதில் ஆத்திரத்தில் திட்டமிட்டு பிரதிமாவை கொலை செய்ததாக போலீசாருக்கு வாக்குமூலமாக அளித்துள்ளார் கிரண். மேலும் கொலை செய்துவிட்டு 200 கிமீ தொலைவில் உள்ள சாமராஜநகருக்கு தப்பி சென்ற இவரை போலீசார் மடக்கி பிடித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.