Model image Google gemeni
இந்தியா

2,000 கி.மீ. பயணம்.. ஒரேயொரு போன் அழைப்பு.. ’த்ரிஷ்யம் - 3’ படத்தால் பீகார் நபர் செய்த செயல்!

கொலை நடந்த இரவில் சிவசங்கரின் போன் படோரி ரயில் நிலையத்தில் ஆன் ஆனதும், அடுத்த 36 மணி நேரத்தில் சூரத்திற்குச் சென்றதும் கண்டறியப்பட்டது.

Prakash J

'த்ரிஷ்யம் - 3' படத்தைப் பார்த்து பீகாரைச் சேர்ந்த ஒருவர், தனது தந்தையைக் கொன்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூரத்தில் இருந்தபோது, 'த்ரிஷ்யம்' திரைப்படத்தைப் பார்த்த அந்த நபர், திரைப்படத்தில் வருவதுபோலக் காவல்துறையினரின் டிஜிட்டல் கண்காணிப்பில் சிக்காமல் கொலையைச் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

'த்ரிஷ்யம் - 3' திரைப்படத்தில், ஒரு கொலைக்குப் பிறகு, தனது குடும்பத்தைப் பாதுகாக்க, ஒரு விரிவான சாட்சியத்தை உருவாக்கி, நிகழ்வுகளின் காலவரிசையை ஹீரோ திரித்துக் கூறுவார். இதே பட பாணியில் பீகாரைச் சேர்ந்த ஒருவர், தனது தந்தையைக் கொலை செய்துள்ளார். பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரகுவீர் சஹானி. இவரது மகன் சிவசங்கர். இருவருக்கும் இடையே குடும்பச் சொத்து மற்றும் நிலத்தை விற்பது தொடர்பாக நீண்டநாட்களாகத் தகராறு இருந்து வந்துள்ளது. மேலும் சஹானி, சிவசங்கரையும் அவரது மனைவியையும் தொடர்ந்து திட்டி, தகாத வார்த்தைகளால் பேசி வந்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த சிவசங்கர், தனது மனைவியுடன் குஜராத்தின் சூரத் நகரத்திற்கு வேலைக்காகச் சென்று குடியேறினார். சூரத்தில் இருந்தபோது, 'த்ரிஷ்யம்' திரைப்படத்தைப் பார்த்த சிவசங்கர், திரைப்படத்தில் வருவதுபோலக் காவல்துறையினரின் டிஜிட்டல் கண்காணிப்பில் சிக்காமல் கொலையைச் செய்யத் திட்டமிட்டார்.

இதற்காக, சூரத்திலிருந்து 2000 கி.மீ. உள்ள தனது ஊருக்குப் புறப்பட்டார். ஆனால், அதற்கு முன்பே தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளார். ரயிலில் வந்திறங்கிய அவர், 4 கி.மீ தூரம் நடந்துசென்று நள்ளிரவு 12 மணிக்குத் தன் கிராமத்து வீட்டை அடைந்துள்ளார். வீட்டின் பின்புறக் கதவு வழியாக ரகசியமாக உள்ளே நுழைந்த சிவசங்கர், வீட்டிலிருந்த கோடாரியை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த தந்தை ரகுவீர் சஹானியின் தலையில் பலமுறை வெட்டிப் படுகொலை செய்தார். பின்னர், நள்ளிரவிலேயே மீண்டும் படோரி ரயில் நிலையத்திற்கு நடந்துசென்று, ரயிலைப் பிடித்துச் சூரத்திற்குத் திரும்பியுள்ளார். இதற்கிடையே ரயில் நிலையத்தில், சுவிட்ச் ஆஃப் செய்திருந்த செல்போனை ஆன் செய்து தன் மனைவியிடம் பேசிவிட்டு மீண்டும் ஆப் செய்துள்ளார். கொலை நடந்த இரவில் சிவசங்கரின் போன் படோரி ரயில் நிலையத்தில் ஆன் ஆனதும், அடுத்த 36 மணி நேரத்தில் சூரத்திற்குச் சென்றதும் கண்டறியப்பட்டது. இதன்பேரில் சிவசங்கர் மீது சந்தேகம் கொண்ட போலீசார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.