மோசடி விவகாரம் தொடர்பாக டாக்டர் கபீல் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மருத்துவர் கபீல் கான். ஏற்கெனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கைதானவர். தற்போது மோசடி புகாரில் கபீல் கானோடு அவரது சகோதரையும் உத்தரப்பிரதேச போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
முசாஃப்பர் ஆலம் என்பவர் கடந்த 2009-ஆம் ஆண்டு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் கபீல் கான் மற்றும் அவரது சகோதரர் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தி போலியாக வங்கிக் கணக்கு துவங்கியுள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும் அதன்மூலம் பல லட்ச பணப்பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளதாகவும் புகார் கூறியிருந்தார். இந்த புகார் தொடர்பாக கபீல் கான் மற்றும் அவரது சகோதரர் 9 ஆண்டுகளுக்கு பின் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே மருத்துவமனையில் சக டாக்டரிம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியதாகவும் கபீல் கான் கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த சனிக்கிழமை அவர் ஜாமீனில் வெளிவந்த நிலையில் வேறு ஒரு புகாரில் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பரில் உத்தரப்பிரதேச பிஆர்டி மருத்துவமனையில் 70 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் கபீல் கான் கைது செய்யப்பட்டார். பின்னர் அலகாபாத் உயர்நீதிமன்றம் அவரை ஜாமினில் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.