இந்தியா

பீகாரில் விடாமல் பெய்த கனமழை - வெள்ளத்தில் மிதக்கும் வடமாநிலங்கள் 

rajakannan

வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பீகாரில் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 23 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 35 பேரும் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 4 நாட்களில் 110 பேர் உயிரிழந்துள்ளனர். 

தென்மேற்கு பருவமழை நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இடைவிடாமல் கனமழை பெய்தது. இதன் காரணமாக பீகார் தலைநகர் பாட்னா, பாகல்பூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மரம் முறிந்து விழுந்தது, சுவர் இடிந்து விழுந்தது உள்பட மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபடும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். 

இதே போல் உத்தரப் பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 35 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், கட்டடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஷகாரன்பூர் என்ற இடத்தில் மலை மீது உள்ள புகழ்பெற்ற சாகம்பரி தேவி கோவில் அருகே ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்ததில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. கோயிலுக்குள் சிக்கியவர்களை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்புத்துறையினர் மீட்டனர். 

ராஜஸ்தானில் 12 பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற லாரி ஒன்று வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு, கரையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி நின்றது. உடனடியாக விரைந்து சென்ற உள்ளூர் மக்கள் அந்த லாரியில் இருந்தவர்களையும், பள்ளிக் குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர். 

இதற்கிடையே நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக பெய்த கனமழைக்கு ஒட்டுமொத்தமாக 110 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.