இந்தியா

“ஹனுமனை சீண்டியதால்தான் பாஜக தோல்வி கண்டது”- ராஜ் பாப்பர்

“ஹனுமனை சீண்டியதால்தான் பாஜக தோல்வி கண்டது”- ராஜ் பாப்பர்

Rasus

ஹனுமன் பற்றி தேவையற்ற கருத்துக்களை தவிர்க்குமாறு பாஜகவிற்கு உத்தரப்பிரதேச காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்தில் 5 மாநிலத் தேர்தல் நடைபெற்றது. அப்போது ராஜஸ்தானில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஹனுமன் ஒரு வனவாசி என்றும் தலித் பிரிவை சேர்ந்தவர் எனவும் குறிப்பிட்டிருந்தார். யோகி ஆதித்யநாத்தின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. தெய்வங்களை சாதி பெயர் சொல்லி பிரிக்க பாஜக முயற்சிக்கிறது எனவும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில் ஹனுமன் பற்றி தேவையற்ற கருத்துகளை தவிர்க்குமாறு பாஜகவிற்கு உத்தரப்பிரதேச காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது. உ.பி.காங்கிரஸ் தலைவரான ராஜ் பாப்பர், “ஹனுமனை அதிகமாக தொந்தரவு செய்யாதீர்கள். அவரின் வாலை சுரண்டியதால்தான் பாஜக 5 மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி கண்டது. ஹனுமன் பற்றிய தேவையற்ற கருத்தை பாஜக தவிர்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த எம்எல்சியான புக்கல் நவாப், ஹனுமன் ஒரு முஸ்லிம் எனக் கூறியிருந்தார். அதேசமயம் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அமைச்சரான லஷ்மி நாராயணன் சவுத்ரி, ஹனுமன் ஜாட் பிரிவை சேர்ந்தவர் எனக் கூறியிருந்தார். ஹனுமன் பற்றி ஒவ்வொரு தலைவரும் மாறிமாறி பேசி வரும் நிலையில் அதுகுறித்த பேச்சை தவிர்க்குமாறு காங்கிரஸ் பாஜகவை அறிவுறுத்தியுள்ளது.