இந்தியா

”இந்தியாவின் இந்தப்பகுதியில் கனடா மக்கள் எச்சரிக்கையாக இருங்கள்” - கனடா அரசின் எச்சரிக்கை

JustinDurai

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இந்திய மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என கனடா அரசு அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனடா அரசு இணையத்தளத்தில் பயண அறிவுறுத்தல் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி கனடாவை சேர்ந்தவர்கள் இந்தியா சென்றால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய 10 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள பகுதிகளுக்கு பயணிப்பதை தவிர்த்து விட வேண்டும். ஏனெனில் அப்பகுதிகளில் கண்ணி வெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருட்கள் இருக்கும் அபாயம் இருக்கிறது. மேலும் குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள் செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதேபோல் இந்தியாவில் தற்போது தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் நிலவுவதால் அந்நாட்டின் மற்ற பகுதிகளிலும் மிகுந்த கவனமுடன் சென்றுவர வேண்டும்.  லடாக் யூனியன் பிரதேசத்திற்கு செல்வதைத் தவிர்க்கவும். மிகுந்த அவசியமின்றி அசாம், மணிப்பூர் மாநிலங்களுக்கு செல்வதையும் தவிர்க்கவும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அண்மையில், இன ரீதியிலான வன்முறை மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரிப்பதால், கனடாவில் உள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. இச்சூழலில்தான் கனடா தன் நாட்டு மக்களுக்கு பயண அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க: இந்தோனேஷியாவில் கண்டறியப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய பூ - 'பிணம் பூ' என அழைக்கப்படுவது ஏன்?