இந்தியா

“கழுதைக்கு இருக்கும் கருணை கூட ஐயப்பன் கோயில் தந்திரிக்கு இல்லை”- அமைச்சர் பேச்சால் சர்ச்சை

“கழுதைக்கு இருக்கும் கருணை கூட ஐயப்பன் கோயில் தந்திரிக்கு இல்லை”- அமைச்சர் பேச்சால் சர்ச்சை

Rasus

சபரிமலை பகுதியில் உள்ள கழுதைகளுக்கு இருக்கும் கருணை கூட ஐயப்பன் கோயில் தந்திரிக்கு இல்லை எனப் பேசிய கேரள அமைச்சரால் சர்ச்சை எழுந்துள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் கேரளாவில் பெரும் போராட்டம் வெடித்தது. இதையடுத்து அக்டோபர் மாதம் இரண்டு பெண்கள் சன்னிதானம் வரை சென்று பக்தர்கள் போராட்டத்தால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் துரிதமாக செயல்பட்டார். ஆனால் அவரின் செயல்பாடுகள் தோல்வியில் முடிவடைந்தது.

இந்நிலையில் மண்டல பூஜைக்காக சபரிமலை நவம்பர் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. 2 மாதங்கள் கோயில் நடை திறந்திருக்கும் சூழலில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு போலீசார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாருஷ்ணனும் சபரிமலைக்கு சென்ற போது போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சபரிமலை பகுதியில் உள்ள கழுதைகளுக்கு இருக்கும் கருணை கூட ஐயப்பன் கோயில் தந்திரிக்கு இல்லை எனப் பேசிய கேரள அமைச்சரால் சர்ச்சை எழுந்துள்ளது. ஆலப்புழா நகரில் நடந்த கலாசார விழா ஒன்றில் பேசிய கேரள பொதுப்பணித் துறை அமைச்சர் சுதாகரன், சபரிமலையில் உள்ள கழுதைகள் ஏராளமான பணிகளைச் செய்வதாகவும், ஒருநாள் கூட போராட்டம் நடத்தியதில்லை என்றும் தெரிவித்தார். கடுமையான பணிக்குப் பிறகு பம்பை நதிக்கரையில் அவை ஓய்வெடுப்பதாகவும், அவற்றுக்கு உள்ள கருணைகூட ஐயப்பன் மீது சபரிமலை கோயில் தந்திரிக்கு இல்லை என்றும் சுதாகரன் கூறினார்.

முன்னதாக சபரிமலையில் அமைதி திரும்பவும் அதன் புனிதத் தன்மை காக்கப்படவும் அவ்விவகாரத்தில் ஆளுநர் சதாசிவம் தலையிட வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. பாஜக பொதுச் செயலாளர் சரோஜ் பாண்டே தலைமையிலான 8 நபர் குழு இக்கோரிக்கையை முன் வைத்துள்ளது. சபரிமலையில் தற்போது அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளதாகவும் அங்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் அக்குழு கூறியுள்ளது. சபரிமலை நிலவரத்தை ஆராய சரோஜ் பாண்டே தலைமையிலான குழுவை பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா நியமித்திருந்தார்.