"இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்காது" என்று பிரதமர் மோடி தனக்கு உறுதியளித்ததாக டிரம்ப் கூறி புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். அதற்கு மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ள நிலையில், ராகுல் காந்தி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். என்ன நடந்தது.. விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பொறுப்பேற்றது முதலே அதிரடியான கருத்துக்களை கூறி உலக அளவில் பேசுபொருளாக இருந்து வருகிறார் டொனால்ட் ட்ரம்ப். அதில் பலவும் பொய்களாக இருப்பதால் அம்பலப்பட்டும் வருகிறார். இதில் இந்தியாவையும் வம்புக்கு இழுக்க ட்ரம்ப் தவறவில்லை. இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - ரஷ்யா, இந்தியா - சீனா விவகாரங்களில் தொடர்ச்சியாக பல்வேறு கருத்துக்களை அவர் தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்துகிறார். குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதல் தன்னுடைய தலையீட்டால் நின்றதாக தொடர்ந்து கூறி வருகிறார். இந்தியா இதனை வெளிப்படையாக மறுத்தபோதும் ட்ரம்ப் தொடர்ந்து சொல்லிக்கொண்டே தான் இருக்கிறார்.
அந்தவகையில், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசி புது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறார். இந்த நடவடிக்கையை ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் முயற்சிகளில் ஒரு பெரிய படி என்று டிரம்ப் விவரித்தார்.
இதுகுறித்து ட்ரம்ப் பேசியபோது, இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டார்கள் என்று நரேந்திர மோடி இன்று எனக்கு உறுதியளித்தார், என்று டிரம்ப் வெள்ளை மாளிகை நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் பேசிய ட்ரம்ப், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கவில்லை என்றால் அது ஒரு பெரிய படி. இப்போது நாம் சீனாவையும் அதே காரியத்தைச் செய்ய வைக்கப் போகிறோம். இந்தியாவால் ஏற்றுமதிகளை உடனடியாக நிறுத்த முடியாது என்றும், இது ஒரு சிறிய செயல்முறை, ஆனால் அந்த செயல்முறை விரைவில் முடிந்துவிடும் என்றும் டிரம்ப் கூறினார்.
பிரதமர் மோடி, டிரம்பிற்கு அத்தகைய உறுதிமொழியை அளித்தாரா என்பது குறித்து நேரடியாக இந்தியா தரப்பில் தற்போதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. உக்ரைனில் நடந்து வரும் போருக்கு மத்தியில், ரஷ்யாவின் எண்ணெய் வருவாயை நசுக்கும் முயற்சிகளை அமெரிக்கா தீவிரப்படுத்தி வரும் நிலையில், ட்ரம்ப் இந்தியா குறித்து தற்போது இப்படி ஒரு கூற்றை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்நிலையில் இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. நிலையான எரிபொருள் விலை மற்றும் எரிபொருள் விநியோகத்தில் பாதுகாப்புத் தன்மை ஆகிய இரண்டும் தான் இந்தியாவின் எரிசக்தி கொள்கை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , அமெரிக்காவுடன், பல ஆண்டுகளாக இந்தியா எரிசக்தி கொள்முதலை விரிவுபடுத்த முயற்சித்து வருகிறோம். கடந்த பத்தாண்டுகளில் இது சீராக முன்னேறி வருகிறது. தற்போதைய நிர்வாகம் இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையே இது தொடர்பாக பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடு. நிலையற்ற எரிசக்தி சூழ்நிலையில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பது எங்கள் நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. எங்கள் இறக்குமதி கொள்கைகள் இந்த நோக்கத்தால் முழுமையாக வழிநடத்தப்படுகின்றன.கச்சா எண்ணெய் விலை குறைவாக கிடைத்தால் இந்திய மக்களின் நன்மைக்காக ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து வாங்குவோம் என்பதை தான் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறைமுகமாக கூறியுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதாக இந்திய பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே, பிரதமர் மோடி அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பைக் கண்டு அஞ்சுகிறார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (X) தளப் பதிவில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தனது குற்றச்சாட்டிற்கு ஆதரவாக அவர் ஐந்து அம்சங்களைப் பட்டியலிட்டுள்ளார்.
ராகுல் காந்தி குறிப்பிட்ட 5 காரணங்கள்:
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்காது என்பதை ட்ரம்பே முடிவு செய்து அறிவிக்க மோடி அனுமதித்துள்ளார்.
ட்ரம்ப் மீண்டும் மீண்டும் இந்தியாவை அவமதித்த பின்னரும், பிரதமர் மோடி அவருக்குத் தொடர்ந்து வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வருகிறார்.
இந்திய நிதியமைச்சரின் அமெரிக்கப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஷர்ம் எல்-ஷேக் அமைதி மாநாட்டைப் (Sharm el-Sheikh) பிரதமர் தவிர்த்துவிட்டார்.
'ஆபரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) குறித்து ட்ரம்ப் பேசிய கருத்துக்களை பிரதமர் மறுக்கவில்லை.
இந்த ஐந்து அம்சங்களையும் பட்டியலிட்டு, "பிரதமர் மோடி ட்ரம்புக்குப் பயப்படுகிறார்" என்று ராகுல் காந்தி தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.