இந்தியா

ஷாருக்கான் திரைப்படத்தைப் புகழ்ந்த ட்ரம்ப் - வைரலாகும் வீடியோ

webteam

இந்தியா பயணத்தின் போது டிடிஎல்ஜே படத்தைப் பற்றி டொனால்ட் ட்ரம்ப் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

‘தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே’ திரைப்படம் பாலிவுட் உலகில் கிளாசிக் படமாக இன்றுவரை இருந்து வருகிறது. ஷாருக்கான், கஜோல் ஆகிய இருவரும் நடித்திருந்த இந்தப் படம் திரை ரசிகர்கள் இடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. வருடக்கணக்கில் திரையில் ஓடி சாதனைப் படைத்தது. அதேபோல் ‘ஷோலே’ படமும் இருந்து வருகிறது.

இந்நிலையில் இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இப்படங்கள் குறித்து அகமதாபாத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில் பேசும் போது உரைநடுவே குறிப்பிட்டார். இந்தப் படத்தின் இசை மற்றும் ரொமான்ஸ் என சகலத்தையும் ட்ரம்ப் பாராட்டினார். இவரைப் போலவே சில ஆண்டுகளுக்கு முன்னதாக வந்த அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் அவரது இந்தியப் பயணத்தின் போது இந்தப் படத்தைக் குறிப்பிட்டிருந்தார்.

“ஆண்டுக்கு 2000 திரைப்படங்களைத் தயாரிக்கும் நாடு இது. மிகச் சிறந்த கலைஞர்களும் மேதைகளும் பாலிவுட்டில் இருக்கிறார்கள். இந்தக் கிரகம் முழுவதிலும் உள்ள மக்கள் பங்க்ரா நடனம், இசை, காதல், நாடகம் ஆகியவற்றை மிகவும் ரசிக்கிறார்கள். அதேபோல் ‘தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே’ படத்தையும் ‘ஷோலே’ போன்ற உன்னதமான இந்தியப் படங்களை கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்” என்று ட்ரம்ப் குறிப்பிட்டார். அதனைக் கேட்ட மோடி மிகவும் ஆமோதிக்கும் விதமாக உற்சாகமாகக் கைதட்டினார்.

ட்ரம்பின் இந்தப் பேச்சு ஷாருக்கான் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 1995ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் குறித்து பலரும் ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் ட்ரம்ப் பேசிய வீடியோவும் வைரலாகி வருகிறது.