ஊடகம் மீது புகார் சுமத்தும் பாரதிய ஜனதா கட்சியினர் தங்களது தவறுகள் மசாலா தருவதுபோல் உள்ளதை சிந்திப்பதில்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
கத்துவா, உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மற்றும் தலித் விவகாரங்களில் பாரதிய ஜனதா தலைவர்கள் தெரிவித்து வரும் கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இந்தச் சூழலில் பாரதிய ஜனதா எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உடன் காணொலி மூலம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஊடகங்களில் கருத்து தெரிவிக்கும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். எந்த விவகாரத்தையும் முழுமையாக அறியாமல் கேமராவை பார்த்தவுடன் பேசத்தொடங்கி விடுவதாகவும்,. ஊடகங்களில் கருத்து தெரிவிக்கும்போது பாஜகவினர் தங்களை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மோடி கேட்டுக் கொண்டார்.
ஊடகங்கள் இதை இப்படி திரித்து கூறிவிட்டன, வேறு விதமாக செய்தி வெளியிட்டு விட்டன என கட்சியினர் குறைகூறி வருகின்றனர். ஆனால் சர்ச்சைக்கு தேவையான மசாலாக்களை நாம் தான் வழங்குகிறோம் என்பதை உணர வேண்டும் என பிரதமர் மோடி கூறினார். ஊடகங்கள் தங்கள் பணியை செய்கின்றன என்றும், எனவே ஊடகங்களை குறை கூறுவதை கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஊடகங்கள் மத்தியில் பொறுப்புடன் பேசத் தெரிந்தவர்கள் மட்டுமே பேச வேண்டும் என்றும் அனைவரும் பேசினால் கட்சி மீதான மதிப்பு மக்கள் மத்தியில் குறைந்து விடும் என்றும் தெரிவித்தார்.