சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தங்களது ஆதார் எண்ணை வெளிப்படையாக பதிவிடுவதை நிறுத்துமாறு ஆதார் தனிநபர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
‘ஆதார் தகவல்கள் மிகவும் பாதுகாப்பானவை’என்று டிராய் எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஷர்மா, ட்விட்டரில் பதிவிட்டிந்திருந்தார்.‘உங்களுக்கு அதிக நம்பிக்கை இருந்தால் உங்களின் ஆதார் எண்ணை வெளிப்படையாக வெளியிடுங்கள்’ என்று சவால் விட்டிருந்தார் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹேக்கர் ஒருவர்.
உடனடியாக, தனது ஆதார் எண்ணை பதிவிட்ட ஷர்மா, “உங்களுக்கு சவால் விடுகிறேன். இந்த ஆதார் எண்ணை வைத்து உங்களால் ஏதாவது தீங்கு ஏற்படுத்த முடியுமா? ‘ என்று சவால் விட்டிருந்தார்.
ஆனால் ஷர்மா பதிவிட்ட சில மணி நேரத்திலேயே அந்த ஹேக்கர், ஷர்மாவின் ஆதார் எண்ணுடன் தொடர்புடைய தகவல்கள் என்று கூறி
சிலவற்றைப் பதிவிட்டார். செல்போன் எண், அந்த எண்ணின் வாட்ஸ் அப் முகப்புப் புகைப்படம், பான் எண், வீட்டு முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை அவர் பதிவிட்டார். எலியட் அல்டர்சன் என்கிற பெயரில், ஷர்மாவின் ட்விட்டருக்கு அவர் பதில் அளித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இவை அனைத்தும் எளிதில் பெறக்கூடிய தகவல்கள் என்று மறுக்கப்பட்டது.
பின்னர் ஷர்மா வங்கி கணக்கில் ரூ1 டெபாசிட் செய்தார் அந்த ஹேக்கர். ஆனால், பணத்தை டெபாசிட் செய்ய முடியும், எடுக்கதான் முடியாது என்று இதுவும் மறுக்கப்பட்டது.
இந்நிலையில், இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தங்களது ஆதார் எண்ணை வெளிப்படையாக பதிவிடுவதை நிறுத்துமாறு ஆதார் வலியுறுத்தியுள்ளது. ஹேக்கர்களுக்கு சாவில்விடும் வகையில் ஆதார் எண்ணை சிலர் பதிவிட்டு வரும் நிலையில், அதுபோன்ற எந்தவொரு அழைப்பையும் விடுக்கவில்லை என்று ஆதார் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதேபோல், வங்கி கணக்கு எண், பாஸ்போர்ட் எண், பான் எண் உள்ளிட்டவை போன்று ஆதார் எண்ணும் தனிப்பட்ட தகவல் என்று ஆதார் நிர்வாகம் கூறியுள்ளது.