தொகுதி மறுவரையறை முகநூல்
இந்தியா

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை... ஆதிக்கம் செலுத்தும் பாஜக? ஆய்வு சொல்லும் தகவல்!

இது குறித்த தகவல்களை பார்க்கலாம்.

PT WEB

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், மத்தியில் ஆட்சி செய்துவரும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதிக்கம் மேலும் வலுவடையும் என்று தரவுகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

முன்னணி ஆங்கில நாளிதழ், 2019, 2024 மக்களவைத் தேர்தல்களில் கட்சிகள் வென்ற தொகுதிகளையும், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்ட பின் இவ்விரு தேர்தல்கள் நடத்தப்பட்டிருந்தால் கட்சிகளின் தொகுதிகள் எண்ணிக்கை எவ்வாறு மாறியிருக்கும் என்ற கணக்கீட்டின் அடிப்படையில் சில முடிவுகளை முன்வைக்கிறது.

தொகுதி மறுவரையறைக்குப் பிறகு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா போன்ற தென் மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். பாஜக ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். அந்த மாநிலங்களிலிருந்தே மத்தியில் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையை அக்கட்சி பெற்றுவிடும். 2019 தேர்தலில் இந்த மாநிலங்களில் 254 தொகுதிகளில் வென்றிருந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தொகுதி மறுவரையரைக்குப் பின் அந்தத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் 277 தொகுதிகளை வென்றிருக்கும். இதன் மூலம் தேசிய அளவில் ஆட்சியை அமைக்கப் போவது யார் என்பதைத் தீர்மானிப்பதில் தென் மாநிலங்கள் மற்றும் மாநிலக் கட்சிகளின் பங்கு இன்னும் கணிசமாகக் குறையும்.