கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்திய மக்களின் சேமிப்பின் அளவு குறைந்துள்ளதாக மத்திய புள்ளியியல் ஆணையத்தின் தரவுகள் தெரிவித்துள்ளது.
இந்தியப் பொருளாதாரத்தில் மக்களின் சேமிப்புதான் பெரிய முதலீடாக கருதப்பட்டு வருகிறது. ஏனென்றால் இந்தத் தொகை தான் மத்திய அரசு மற்றும் கார்பரேட் நிறுவனங்களுக்கும் முக்கிய கடன் தொகையாக அமையும். இந்தத் தொகை கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது குறைந்துள்ளது அரசின் தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
மத்திய புள்ளியியல் ஆணையத்தின் தரவுகளின்படி 2018ஆம் ஆண்டு மக்களின் சேமிப்பு தொகை இந்தியாவின் மொத்த உள்நாடு உற்பத்தியில் 30.5% ஆக குறைந்துள்ளது. இது கடந்த 2008ஆம் ஆண்டு இருந்த 37 சதவிகிதத்தைவிட மிகவும் குறைந்ததாகும். அதேபோல ரியல் எஸ்டேட் நிலங்கள் மூலம் மக்களின் சேமிப்பும் மிகவும் குறைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. அதாவது 2012 ஆம் ஆண்டு 15.9%ஆக இருந்த இந்தச் சேமிப்பு தற்போது 10.3%ஆக குறைந்துள்ளது.
மேலும் வங்கிகளில் மக்களின் சேமிப்பு சதவிகிதம் 2012ஆம் ஆண்டு 7.4% ஆக இருந்தது. இது 2018ஆம் ஆண்டு 6.6%ஆக குறைந்துள்ளது. அத்துடன் கடந்த பத்து ஆண்டுகளில் மக்கள் கடன் வாங்கும் அளவு அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கியின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது மக்களின் மொத்த கடன் தொகை 2009ஆம் ஆண்டு 2,03,400 கோடியாக இருந்தது. இது தற்போது 6,73,900 கோடியாக அதிகரித்துள்ளது. ஆகவே மக்கள் சேமிப்பைவிட செலவு செய்வதிலேயே அதிகம் கவனம் செலுத்துவதாக தெரியவந்துள்ளது.