பயங்கர நிலச்சரிவு முகநூல்
இந்தியா

திடீரென ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு.. 67 பேரின் உயிரை காத்த ஒற்றை நாய்!

கடந்த சில நாட்களாகவே, இமாச்சலில் கனமழை பெய்துவரும்நிலையில், திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கவிருந்த 67 பேரை, அந்த பகுதியை சேர்ந்த ஒற்றை நாய் காப்பாற்றியுள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

கடந்த சில நாட்களாக மலைப்பகுதி மாநிலங்களான இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் பெய்து வரும் கனமழையால் பரவலான சேதம், இடையூறு மற்றும் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற எச்சரிக்கைகளை  தொடர்ந்து கனமழை பெய்யும் என்றும், நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ள அபாயம் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது.

இமயமலைப் பகுதியில் பருவமழை தீவிரமடைந்து வருவதால், நிரம்பி வழியும் ஆறுகள், உடைந்த சாலைகள் மற்றும் இடிந்து விழுந்த பாலங்கள் காரணமாக நூற்றுக்கணக்கான உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர். இரு மாநிலங்களும் அவசரகால மீட்பு குழுவினர் விரைந்தநிலையில் அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளிலிருந்து குடியிருப்பாளர்கள் விலகி இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தவகையில், கடந்த மாதம் ​20-ம் தேதி முதல் ஜூலை 6-ம் தேதி வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்​பட்டு கனமழை பெய்​தது. இதனால், 16 இடங்​களில் நிலச்​சரிவு ஏற்​பட்​டது. குறிப்​பாக மண்டி பகுதி மிகப்​பெரிய அளவில் பாதிக்​கப்​பட்​டது.

மண்டி மாவட்டத்தில் இதனால், 14 பேர் இறந்துள்ளனர், 5 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் 30 பேர் தற்போதுவரை காணவில்லை. மேலும், இறப்பு எண்ணிக்கை 78 ஐ தாண்டி சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, கடந்த மாதம் 30-ம் தேதி நள்​ளிர​வில் மண்டி மாவட்​டம் தரம்​பூர் பகு​தி​யில் உள்ள சியாதி கிராமம் நிலச்​சரி​வால் பாதிக்​கப்​பட்​டது.

இதனால், கிராமத்தின் பெரும்பகுதி சேதமடைந்தது. ஆனால், தக்க சமயத்தில் அங்கிருந்த நாய் ஒன்று எழுப்பிய எச்சரிக்கை குரல்தான் தற்போது 20 குடும்பங்களை சேர்ந்த சுமார் 67 பேரை காப்பாற்றியுள்ளது.

நிலச்​சரிவுக்கு முன்பு நள்​ளிர​வில் அங்​கிருந்த ஒரு நாய் கடுமை​யாக குரைத்து சத்​தம் எழுப்​பி​யுள்​ளது. நாய் தொடர்ந்து குரைத்ததால் அந்த சத்​தத்தை கேட்டு கண்​விழித்த அதன் உரிமை​யாளர் நரேந்​திரா தனது வீட்​டின் சுவரில் விரிசல் விழுந்து தண்​ணீர் உள்ளே வரு​வதை பார்த்​துள்​ளார். ஆபத்தை உணர்ந்த அவர், உடனடியாக தனது குடும்பத்தினருக்கு வீட்டை விட்டு வெளியேறும்படி தகவல் அளித்துவிட்டு உடனடியாக கிராமத்தில் இருந்த மற்றவர்களையும் எழுப்ப விரைந்துள்ளார்.

பலத்த மழையையும் பொருட்படுத்தாத கிராம மக்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு நகர்ந்தனர். பின்​னர் சிறிது நேரத்​தில் அந்த கிராமத்​தில் ஏற்​பட்ட பயங்​கர​மான நிலச்​சரி​வில் பல வீடு​கள் தரைமட்​ட​மா​யின. சரி​யான நேரத்​தில் நாய் குரைத்து எச்​சரிக்கை செய்​த​தால் சியாதி கிராமத்​தின் 20 குடும்​பங்​களை சேர்ந்த 67 பேர் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பியுள்​ளனர்.

மேலும், வெளியேறிய மக்கள் நைனா தேவி கோயிலில் தஞ்சம் புகுந்துள்ளனர்.