அகமதாபாத் விமான விபத்து முகநூல்
இந்தியா

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர்... புதிய பிரச்சனையில் சிக்கிய அதிர்ச்சி!

அகமதாபாத் விமான விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஒரே ஒரு நபர், தற்போது வேறொரு பிரச்னையில் சிக்கியிருப்பது கேட்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. கடந்த 12 ஆம் தேதியன்று, ஏற்பட்ட இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். 1 பயணி மட்டும் உயிர் பிழைத்தார்.

இந்நிலையில், விமானம் மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியநிலையில், 33 பேர் உட்பட மொத்தம் 274 பேர் மரணம் அடைந்தனர். இதில் உயிர் பிழைத்த ஒரே விமான பயணி, விஸ்வாஸ் குமார் ரமேஷ், தற்போது வேறுறொரு பிரச்னையோடு போராடி வருவதாக அதிர்ச்சிகர செய்திகள் வெளியாகியுள்ளது.

டையூவில் உள்ள தங்கள் குடும்பத்தினரைப் பார்த்துவிட்டு, விஸ்வாஸும் அஜயும் ஏர் இந்தியா விமானத்தில் லண்டனுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் வந்த விமானத்தில்தான் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது. உடன் வந்த இவரது சகோதரரும் இறந்தார். ஜூன் 18 அன்று, அவர் தனது சகோதரரின் உடலை தோள்களில் சுமந்து சென்று தகன மைதானத்திற்கு எடுத்துச் சென்ற காட்சிகள் காண்போரை கண்கலங்க வைத்தது.

இந்நிலையில்தான், விஸ்வாஸ் குமார் ரமேஷ் தற்போது டையூவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். அவருடன் உறவினர் சன்னி இருக்கிறார். விஸ்வாஸ் குமார் ரமேஷ் புதிய பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சன்னி கூறியுள்ளார்.

அதில், ” வெளிநாட்டில் வசிக்கும் எங்கள் உறவினர்கள் உட்பட பலர் விஸ்வாஸின் நலம் விசாரிக்க எங்களை தொடர்ந்து அழைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் யாரிடமும் பேசுவதில்லை, பேசுவதற்கு தயாராக இல்லை . சில வேளைகளில் அவர் பேசினாலும் திடீரென்று அதிர்ச்சியில் உறைந்து விடுகிறார். பேச்சு வராமல் ஆகிவிடுகிறது. அவரது சகோதரர் அஜய் இறந்தது உள்ளிட்டவற்றில் இருந்து விஸ்வாஸ் மீளவில்லை. விமான விபத்து நடந்த இடம், அவரது சகோதரர் அஜய் இறந்தது உள்ளிட்டவை தொ டர்ந்து அவர் மனதில் தங்கி உள்ளது.

அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் இன்னும் மீளவில்லை. திடீரென நள்ளிரவில் எழுந்துவிடுகிறார், ஆனால், மீண்டும் தூங்குவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நாங்கள் அவரை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று அதற்கான தீர்வைக் கண்டோம். அவருக்கான சிகிச்சை இப்போதுதான் தொடங்கியுள்ளது. எனவே, மீண்டும் அவர் லண்டனுக்கு திரும்புவது பற்றி அவர் யோசிக்கவில்லை.”என்று தெரிவித்துள்ளார்.