kcr
kcr pt web
இந்தியா

மீண்டும் BRS to TRS..? ‘பெயரை மாற்றுங்கள்’ அடிமட்டத்தில் இருந்து எழுந்த குரல்..

Angeshwar G

தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கேசிஆர் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி பாரத் ராஷ்ட்ரிய சமிதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஒருங்கிணைந்த ஆந்திரத்தில் இருந்து பிரிந்து தெலுங்கானா எனும் தனி மாநிலத்தை உருவாக்குவதற்கு போராடுவதற்கான கட்சியாக 2001 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது டிஆர்எஸ் எனும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி.

தனி மாநிலமாக உருவான பின், 2014, 2018 என இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்று கேசிஆர் முதல்வராக செயல்பட்டார். அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி, பாஜகவின் பெரும்பான்மை, மாநில அளவிலும் முக்கிய எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் போன்ற காரணங்களால் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியை தேசிய கட்சியாக மாற்றும் முனைப்பில் ஈடுபட்டார் கேசிஆர்.

இதன் காரணமாக தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியை பாரத் ராஷ்ட்ரிய சமிதி எனும் பெயர் மாற்றம் செய்தார். ஆனால் அடுத்து நடந்த சட்டமன்ற தேர்தலில் பிஆர்எஸ் படுதோல்வியை சந்தித்தது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 65 தொகுதிகளிலும், பிஆர்எஸ் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.

இத்தகைய சூழலில் கட்சியின் பெயரை மீண்டும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என அக்கட்சியின் தொண்டர்கள் விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்கட்சியின் மூத்த தலைவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், இத்தகைய கருத்துகள் எழுந்ததாக தெரிவிக்கப்பட்டது. தற்போதைய பெயர் கட்சியின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இல்லை என்று அக்கட்சியின் சில தலைவர்கள், அடிமட்டத் தொண்டர்கள் பலரும் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனாலும் டிஆர்எஸ் என்ற பழைய பெயருக்கு திரும்ப வாய்ப்பில்லை என அக்கட்சியின் தலைமை தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.