கொரோனா பேரிடரில் 'கிராமப்புற இந்தியா' புறக்கணிக்கப்படுவதாக வெளியான தகவல்களை மறுத்துள்ள மத்திய அரசு, கிராமப்புறங்களில் போதிய சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்கி வருவதாக விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
போதிய சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவதிலும், கிராமப்புறங்களில் பேரிடரின் அளவை கணக்கிடுவதிலும் இந்திய அரசு சுணக்கம் காட்டி வருவதாகவும், பெருந்தொற்றின்போது 'கிராமப்புற இந்தியா மறைக்கப்பட்டுள்ளதாகவும்' சில செய்திகள் தெரிவிக்கின்றன.
கிராமப்புறங்களில் கொரோனா மேலாண்மையில் இந்திய அரசு துடிப்புடன் பணியாற்றி வருகிறது. பல்முனை சுகாதார உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதோடு, மாநிலங்களின் சிறப்பான பங்களிப்புடன் பொது சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஊரகப் பகுதிகளில் மிகப்பெரிய அளவில் அரசு சுகாதார வசதிகள் உள்ளன. 2020 மார்ச் 30-படி, 1,55,404 துணை சுகாதார மையங்களும், 24,918 ஆரம்ப சுகாதார மையங்களும் கிராமப்புறங்களில் செயல்பட்டு வந்தன. 5,895 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மயங்கள் செயல்பட்டு வருகின்றன.
கூடுதலாக, 2018 ஏப்ரலில் தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் - சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் இந்தியாவின் பொது சுகாதார வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்துள்ளன. இதுநாள் வரை, 75,995 சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன.
மேலும், பல்வேறு மாவட்டங்களின் கிராமப்புறங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் நோய் பரவலை கருத்தில் கொண்டு, 'புறநகர், ஊரக மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடு மற்றும் மேலாண்மைக்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை' 2021 மே 16 அன்று சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டது. இதை காண, இங்கு க்ளிக் செய்யவும்
ஊரக மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் கொரோனா தடுப்பு மருந்து வழங்குதலை மேம்படுத்துவதற்காக சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.