இந்தியா

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக கொரோனா தடுப்பூசியா? - மத்திய அரசு சொல்வதென்ன?

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக கொரோனா தடுப்பூசியா? - மத்திய அரசு சொல்வதென்ன?

Sinekadhara

பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் அதிக எண்ணிக்கையில் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை வழங்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி இம்மாதம் 15 ஆம் தேதிவரை மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படவிருக்கும் தடுப்பூசிகள் பட்டியல் வெளியாகி உள்ளது.

அதன்படி பாரதிய ஜனதா - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாருக்கு 7 லட்சத்து 65 ஆயிரம், குஜராத்திற்கு 12 லட்சத்து 49 ஆயிரம், கர்நாடகாவுக்கு 10 லட்சத்து 5 ஆயிரம் தடுப்பூசிகளும் வழங்கப்படவிருக்கின்றன. மத்தியப்பிரதேசத்திற்கு 8 லட்சத்து 71 ஆயிரம், உத்தரப்பிரதேசத்திற்கு 13 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்படவிருப்பதாக அந்தப் பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது.

பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களான தமிழ்நாட்டுக்கு 5 லட்சத்து 39 ஆயிரம் தடுப்பூசிகளும், பஞ்சாபிற்கு 4 லட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகளும் வழங்கப்படவிருப்பதாக அந்தப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள செய்தியில், “கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தப் போராட்டத்தில் இந்திய அரசின் ஐந்து அம்ச உத்திகளில் பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை, சரியான வழிகாட்டு நெறிமுறை‌ ஆகியவற்றுடன் தடுப்பூசி, மிக முக்கிய அங்கம் வகிக்கிறது.

கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் மூன்றாவது கட்டம் இன்று (2021, மே 1) முதல் நடைமுறைப்படுத்தப்படும். இந்திய அரசு இதுவரை சுமார் 16.37 கோடி (16,37,62,300) தடுப்பூசி டோஸ்களை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளது. இவற்றில் வீணானவை உட்பட மொத்தம் 15,58,48,782 டோஸ்கள் போடப்பட்டுள்ளன. 79 லட்சத்திற்கும் அதிகமான (79,13,518) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் கையிருப்பில் உள்ளன.

மேலும் சுமார் 17 லட்சம் டோஸ்கள்‌ (17,31,110), அடுத்த மூன்று நாட்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக வழங்கப்படும். 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு இந்திய அரசின் மூலமாக இலவசமாக வழங்கப்பட உள்ள தடுப்பூசி டோஸ்களின் மொத்த எண்ணிக்கை குறித்த தகவல்களை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியுள்ளது.

இதன்படி மே மாதத்தின் முதல் 15 நாட்களில், தமிழகத்திற்கு 5,39,060 கோவிஷீல்டு தடுப்பூசிகளையும், 1,94,120 கோவேக்சின் தடுப்பூசிகளையும், புதுச்சேரிக்கு 29,890 கோவிஷீல்டு தடுப்பூசிகளையும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.