இந்தியா

வாட்ஸ் அப் காலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த டாக்டர்ஸ்.. காஷ்மீரில் நடந்தது என்ன?

JananiGovindhan

பிரசவ வலியால் அவதியுற்ற பெண்ணுக்கு வாட்ஸ் அப் கால் வழியாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிகழ்வு ஜம்மு காஷ்மீரில் நடந்திருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவு அதீதமாக இருப்பதால் மக்கள் இயல்பு வாழ்க்கை அங்கு பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அவசர தேவைக்கு கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலே இருக்கின்றன.

அந்த வகையில் ஜம்மு காஷ்மீரின் கெரன் என்ற பகுதியில் உள்ள அரசு சுகாதார மையத்திற்கு பிரசவ வலியோடு வந்த பெண்ணுக்கு வாட்ஸ் அப் கால் வழியாக நல்ல முறையில் பிரசவம் பார்க்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து கெரன் பகுதியைச் சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முகமது ஷஃபி பேசுகையில், “கடந்த வெள்ளியன்று பிரசவ வலியோடு சிகிச்சைக்காக பெண் ஒருவர் வந்தார். அவர் eclampsia மற்றும் episiotomy என்ற சிக்கலான நிலையில் இருந்தார்.

இதனால் மகப்பேறு மருத்துவம் பார்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் கடும் பனிப்பொழிவால் விமான இயக்கத்துக்கான சூழல் இருக்கவில்லை.” என்றுக் கூறியிருக்கிறார்.

இதனால் கர்ப்பிணிக்கு உடனடியாக பிரசவம் பார்த்தே ஆகவேண்டிய கட்டாயம் இருந்ததால், ஜம்மு காஷ்மீரின் துணை மாவட்டமான க்ரால்போராவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர்கள் பர்வைஸ், அர்ஷத் சோஃபி மற்றும் பிற மருத்துவ ஊழியர்கள் கெரன் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களை வாட்ஸ் அப் வழியாக அழைத்து அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க உரிய அறிவுறுத்தல்களை கூறியிருக்கிறார்கள்.

இதனையடுத்து ஆறு மணிநேர தீவிர சிகிச்சைக்கு பிறகு அப்பெண்ணுக்கு ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. தற்போது தாயும் சேயும் நலமுடன் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பு:

மருத்துவர்கள் தங்களை விட அனுபவம் வாய்ந்தவர்களின் அறிவுறுத்தல்களின் பேரில் வாட்ஸ் அப் வழியாக பேசி தொடர்பிலேயே இருந்து இந்த பிரசவத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள். ஆனால், இதனை கருவாக கொண்டு மக்கள் எவரும் சமூக வலைதளங்களை பார்த்தோ சுயமாகவோ வீட்டில் பிரசவம் பார்க்கும் செயலில் ஈடுபட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.