மகாராஷ்ட்ராவில் கடந்த நான்கு நாட்களாக நடந்த மருத்துவர்கள் வேலைநிறுத்தம் நள்ளிரவு வாபஸ் பெறப்பட்டது. இன்று காலை முதல் மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளதால் நோயாளிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
மும்பை மருத்துவமனையில் நோயாளிக்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி மருத்துவர் ஒருவரை கடந்த வாரத்தில் நோயாளின் உறவினர்கள் கடுமையாகத் தாக்கினர். படுகாயமடைந்த மருத்துவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நான்கு நாட்களாக ஒட்டுமொத்த தற்காலிக விடுப்பு எடுத்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், மருத்துவர்களின்றி பல மருத்துவமனைகளில் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதையடுத்து, முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் தலையிட்டு, மருத்துவர்களைத் தாக்குவோருக்குக் கடுமையான தண்டனையும், ஜாமீனில் வர முடியாத, கைது நடவடிக்கையும் எடுக்க, சட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார். மருத்துவர்களின் பாதுகாப்பை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப் போவதாக, மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த உறுதிமொழிகளை ஏற்று நேற்று நள்ளிரவில் வேலைநிறுத்தத்தை மருத்துவர்கள் விலக்கிக் கொண்டனர். இன்று காலை முதல் அவர்கள் பணிக்குத் திரும்பியதால், மும்பை மருத்துவமனைகளில் நோயாளிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.