இந்தியா

போலீசாரின் கையை துண்டாக்கிய கும்பல்: மீண்டும் ஒட்டவைத்த மருத்துவர்கள்!

போலீசாரின் கையை துண்டாக்கிய கும்பல்: மீண்டும் ஒட்டவைத்த மருத்துவர்கள்!

webteam

பஞ்சாபில் கும்பல் ஒன்றால் வெட்டப்பட்ட போலீசாரின் கை மீண்டும் ஒட்டவைக்கப்பட்டது.

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் காய்கறி மார்க்கெட் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்றிடம் வெளியே நடமாடுவதற்கான பாஸ் இருக்கிறதா என போலீசார் கேட்டுள்ளனர். ஆனால் அந்தக் கும்பல் போலீசாரை மீறி சென்றுள்ளது. இதனை அடுத்து மீண்டும் போலீசார் அவர்களை மறிக்கவே அந்தக்கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியது.

கும்பல் வைத்திருந்த கத்தியால் தாக்கியது. இதில் காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவரின் கை துண்டானது. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவருக்கு உரிய மேல்சிகிச்சை தேவை என்பதால் PGIMER மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு வெட்டப்பட்ட கை மீண்டும் ஒட்டவைக்கப்பட்டுள்ளது. போலீசாரின் கையை ஒட்டவைத்த மருத்துவக் குழுவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே போலீசார் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்