இந்தியா

திடீரென மயக்கமடைந்த நோயாளி.. சற்றும் தாமதிக்காமல் நொடிகளில் காப்பாற்றிய மருத்துவர்!

Sinekadhara

திடீரென மயக்கமடைந்த நபரின் உயிரை மருத்துவர் ஒருவர் காப்பாற்றும் வீடியோ இணையங்களில் பரவி பலரின் பாராட்டுக்களையும் பெற்றுவருகிறது.

இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள கோலாப்பூரில் நடந்துள்ளது. இந்த வீடியோவை மாநிலங்களவை எம்.பி தனன்ஜெய் மஹாதிக் உள்ளிட்ட பலரும் பகிர்ந்துள்ளனர். அது ஒரு சிசிடிவி காட்சிபோல் உள்ளது. அந்த வீடியோ க்ளிப்பின் 37 நொடியில் ப்ளூ நிற சட்டை அணிந்த நபர் மருத்துவரிடம் பேச முயற்சிக்கிறார். அப்போது திடீரென சுயநினைவை இழப்பதை மருத்துவருக்கு உணர்த்தும் விதமாக டேபிளில் மெதுவாக தட்டுகிறார். அப்படியே பின்புறம் சாய்ந்துவிடுகிறார். ஒரு நொடிகூட தாமதிக்காமல் இருக்கையைவிட்டு எழுந்த மருத்துவர் அந்த நபரிடம் ஓடிவந்து, அவரது மார்பில் மெதுவாக அழுத்தம் கொடுத்து (CPR) அவரை இயல்புநிலைக்கு கொண்டுவருகிறார்.

’’இந்த வீடியோ நம் நடுவில் வாழ்கின்ற நிஜ கதாநாயகனுக்கு ஒரு உதாரணத்தைக் காட்டுகிறது. கோலாப்பூரைச் சேர்ந்த சிறந்த இதயநோய் நிபுணர்களில் ஒருவரான டாக்டர் அர்ஜுன் அட்நாயக் நோயாளியின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். இத்தகைய மாண்புமிகு மற்றும் நல்லொழுக்கமுள்ள மாவீரர்களை நான் பாராட்டுகிறேன்’’ என்று எம்.பி மஹாதிக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மருத்துவரின் இந்த ஹீரோ செயலை 38 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்து பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். உயிரை காப்பாற்றும் அடிப்படை முதலுதவிகள், இதயம் குறித்த பாடங்களை பள்ளிகளிலேயே கற்பிக்க வேண்டும் என பயனர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.