atrocities against ST-SC people FB
இந்தியா

பட்டியலின - பழங்குடி மக்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகம் நடக்கும் மாநிலம் எது தெரியுமா?

பட்டியலின, பழங்குடி மக்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகம் நிகழும் மாநிலம் உத்தர பிரதேசம் 3ஆம் இடத்தில் ராஜஸ்தான், 4ஆம் இடத்தில் தலைநகர் டெல்லி என மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன..

Vaijayanthi S

இந்தியாவிலேயே பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகம் பதிவாகும் மாநிலமாக உத்தர பிரதேசம் இருப்பது மத்திய அரசின் புள்ளி விவரங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு தீர்வுகாண 2020 ஆம் ஆண்டில் தேசிய உதவி மையம் உருவாக்கப்பட்டது. இந்த உதவி மையத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் 6.34 லட்சம் புகார் அழைப்புகள் வந்துள்ளன.

அதிகபட்சமாக உத்தர பிரதேசம் மாநிலத்திலிருந்து மட்டும் 3.4 லட்சம் அழைப்புகள் வழந்துள்ளன. அதாவது, இந்தியா முழுவதும் பட்டியலின, பழங்குடி மக்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பான ஒட்டுமொத்த புகார் அழைப்புகளில் உத்தர பிரதேசத்தின் பங்கு மட்டும் 53 சதவீதம் ஆகும். இந்தப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் பிஹார் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பிஹாரிலிருந்து 59,0025 புகார் அழைப்புகள் வந்துள்ளன.

atrocities against ST-SC people

இது மொத்த அழைப்புகளில் 9 சதவீதம் ஆகும். 40,228 அழைப்புகளுடன் ராஜஸ்தான் மூன்றாம் இடத்திலும், 29,000 அழைப்புகளுடன் தலை நகர்டெல்லி நான்காம் இடத்திலும் உள்ளன. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மாநிலங்களவையில் அளித்ததகவலின்படி, இந்த மையம், குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் -1955,பட்டியலின மற்றும் பழங்குடி இனத்தவருக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் - 1989ஆகிய சட்டங்களின் கீழ் வரும் புகார்களைப் பதிவு செய்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

2020-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த உதவி மையத்திற்கு, அதிகபட்சமாக 2023-ஆம் ஆண்டில் மட்டும் 3.4 லட்சத்துக்கும் அதிகமான புகார் அழைப்புகள் வந்துள்ளன. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இந்த மையம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்று கூறியுள்ள உதவி மையம், 14566 என்ற டோல்ஃபிரி எண் மூலம் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.