இந்தியா

சுங்கச்சாவடிகளில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் தெரியுமா..?

சுங்கச்சாவடிகளில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் தெரியுமா..?

webteam

தமிழகத்தில் உள்ள சில சுங்கச்சாவடிகளில் கடந்த சில வருடங்களாகவே பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். கட்டணங்கள் அதிக அளவில் வசூலிக்கப்பட்டாலும், போதிய வசதிகள் சாலைகளில் செய்து தரப்படவில்லை என்றும் புகார்கள் அவ்வவ்போது எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டாயம் இருக்க வேண்டிய வசதிகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது. இந்திய சுங்கச்சாவடிகள் சட்டத்தின் படி கீழே கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் நிச்சயம் சுங்கச்சாவடிகளில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

1. இந்திய சுங்கச்சாவடிகள் சட்டத்தின் படி வாகன ஓட்டிகளுக்கும் பயணிகளுக்கும் குடிநீர் வசதி செய்து தரப்பட்டிருக்க வேண்டும்.

2.. ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி கழிவறைகள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.

3. முதலுதவிகள் அளிக்க தேவையான பொருள்கள் அடங்கிய முதலுதவி சிகிச்சைப் பெட்டி இருக்க வேண்டும்.

4. சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று கட்டாயம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்க வேண்டும்‌.

5. சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் எவ்வித தாமதம் இன்றியும், இடையூறு இன்றியும் செல்ல பிரத்யேக வழி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

6. பாதசாரிகளும், இருசக்கர வாகனங்களும் செல்ல பிரத்யேக வழி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்‌.

7. ஒவ்வொரு வாகனமும் செலுத்த வேண்டிய சுங்கக் கட்டணங்களை உள்ளடக்கிய அறிவிப்பு பலகை இடம்பெற்றிருக்க வேண்டும்.

8. சுங்கச்சாவடி அமைந்திருக்கும் இடத்தின் பெயர் தெளிவாக சுட்டிக்காட்டும் பெயர்ப்பலகையும் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

9. சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருக்கும் போது அடுத்து எந்த இடத்தில் சுங்கச்சாவடி இருக்கிறது என்ற விவரங்களும் பெயர் பலகையில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

10. தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடியாக இருப்பி‌ன் வாகன ஓட்டிக‌ள் ஓய்வெடுப்பதற்கான அறைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.