அரசியல்வாதிகள் என்ன உங்களுக்கு கார்டூன் சித்திரம் போல தோன்றுகிறதா என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஆவேசமாகக் கூறியுள்ளார்.
சில சேனல்கள் மற்றும் இணையதளங்கள் அரசியல்வாதிகளை நையாண்டி செய்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இதைக் கர்நாடக முதல மைச்சர் குமாரசாமி கண்டித்துள்ளார். மைசூருவில் நேற்று நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், மீடியாவை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர ஆலோசிப்பதாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, ‘’எங்கள் பெயரைத் தவறாகப் பயன்படுத்த நீங்கள் (மீடியா) யார்? எங்களைப் போன்ற அரசியல்வாதிகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எங்களுக்கு வேலையில்லை என்று நினைக்கிறீர்களா? நாங்கள் கார்ட்டூன் சித்திரங்கள் போல தோன்றுகிறோமா? எல்லாவற்றையும் நகைச்சுவையாக காட்ட உங்களுக்கு யார் அதிகாரம் அளித்தது? எங்களை சிறுமைப்படுத்த நீங்கள் யார்? உங்களைப் பற்றி எனக்கு பயமும் இல்லை, கவலையுமில்லை. எலெக்ட்ரானிக் மீடியாவில், வரும் சில கதைகளை படித்தால் தூக்கம் போய்விடும். அதனால் அதைக் கண்டுகொள்வதில்லை’’ என்று கோபமாகப் பேசினார்.
பின்னர், தங்கள் அரசு ராகுல் காந்தியின் நல்லாசியுடனும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவின் ஆதரவுடனும் தொடரும் என்றும் சிலரின் யூகங்களை போல எதுவும் நடக்காது என்றும் அவர் தெரிவித்தார்.