இந்தியா

ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் வாங்க வேண்டாம் - ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

ச. முத்துகிருஷ்ணன்

ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் அளிப்பவர்களின் அடாவடி வசூல் நடவடிக்கைகளால் பல தற்கொலைகள் நிகழ்ந்துள்ள நிலையில், இத்தகைய மோசடி செயலிகள் மூலம் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கடன் தருவதாகக் கூறி தனிப்பட்ட நபர்களின் ஆதார், பான், மின்னஞ்சல் விவரங்களை பெறும் ஆன்லைன் செயலிகள், வாடிக்கையாளரின் தொலைபேசியில் உள்ள விவரங்களையும் பதிவிறக்கம் செய்வதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்த விவரங்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை மிரட்டி கந்துவட்டி போன்று அடாவடியாக பணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார்கள் பல எழுந்தன.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிப்பதற்கு செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ்வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், ஆன்லைன் செயலிகள், பதிவு செய்யாமலே கடன் அளிக்கும் வியாபாரத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தார். இத்தகைய செயலிகளின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் புகார் அளிக்க வேண்டும் என்று சக்தி காந்த தாஸ் வலியுறுத்தினார்.

வங்கிகள் பெயரில் அனுப்பப்படும் போலி கடன் வழங்கும் லிங்க்குகளை வாடிக்கையாளர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் எந்த தகவலையும் இதுபோன்ற குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகளையும் நம்பி தகவல்களை பகிர வேண்டாம் என்றும் அறிவுரை கூறிய சக்தி காந்த தாஸ், சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்திகளை கண்டால், சம்பந்தப்பட்ட வங்கியின் கிளையை வாடிக்கையாளர் அணுக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.