புதுவை ஆளுநர் கிரண்பேடியின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்த பேசிய அனுமதி மறுக்கப்பட்டதால், திமுக எம்.பிக்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.
சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு மோசமான ஆட்சியே காரணம் என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி குற்றஞ்சாட்டியிருந்தார். இந்தியாவின் பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது எனவும் மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவைகளால் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது எனவும் கிரண்பேடி விமர்சித்திருந்தார். மேலும் மக்களின் சுயநல எண்ணமும் மோசமான அணுகுமுறையும் கூட இந்தப் பிரச்னைக்கு காரணம் எனத் தெரிவித்திருந்தார்.
கிரண்பேடியின் இந்தக் கருத்துக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். கிரண்பேடியின் இந்தப் பேச்சுக்கு சட்டப்பேரவையில் திமுக தலைவர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் கிரண்பேடி ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்நிலையில், மக்களவையில் கிரண்பேடியின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து பேச திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு முயற்சித்தார். ஆனால், சபாநாயகர் ஓம் பிர்லா அதற்கு அனுமதிக்க மறுத்துவிட்டார். இதனையடுத்து, கிரண்பேடி குறித்து பேச அனுமதிக்கக் கோரி திமுக எம்.பி.க்கள் முழக்கங்கள் எழுப்பினார். இதனால், அவையில் சிறிது நேரம் அமளி நிலவியது. சிறப்பு தீர்மானம் இல்லாமல் விவாதிக்க முடியாது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.