CM DK Shivakumar x page
இந்தியா

கர்நாடகா | முதல்வராகப் பதவியேற்ற டி.கே.சிவகுமார்.. புதிய அமைச்சர்கள் யார்யார்?

இதில், சித்தராமையா பதவி விலக வேண்டும் எனவும் அவர் தேசிய அரசியலில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

Prakash J

கர்நாடக முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். மேலும் அவருடன் ஜி.பரமேஸ்வரா துணை முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். இவர்களைத் தவிர 12 பேர், அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

2023ஆம் ஆண்டு தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த நிலையில், முதல்வர் பதவிக்காக சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இடையே போட்டி ஏற்பட்டது. பின்னர், இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்குவதாக கூறி, காங்கிரஸ் மேலிடம் அவர்களை சமாதானம் செய்ததாகக் கூறப்பட்டது. ஆனால் வெளிப்படையாக எதுவும் அறிக்கப்படவில்லை. இதையடுத்து, முதல்வராக சித்தராமையா பதவியேற்றார். துணை முதல்வராக டி.கே.சிவகுமார் பொறுப்பேற்றார். என்றாலும், கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் குறித்து பேச்சுகள் அவ்வபோது எழுந்துவந்தன. இத்தகைய சூழலில், காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தில் 3 ஆண்டுகளைக் கடந்த நிலையில், சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர்.

CM DK Shivakumar

இதன் காரணமாக கடந்த மே 26-ஆம் தேதி கர்நாடக முதல்வரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் ராகுல்காந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சித்தராமையா பதவி விலக வேண்டும் எனவும் அவர் தேசிய அரசியலில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதை ஏற்று, சித்தராமையா தனது பதவி விலகல் கடிதத்தை அளித்தார். அவரது பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்ட நிலையில், மொத்தம் 138 சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் டி.கே.சிவகுமார் காங்கிரஸின் சட்டமன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், கர்நாடக முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அவரைத் தொடர்ந்து, மூத்த காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வரா கர்நாடகாவின் துணை முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். மேலும் டி.கே.சிவகுமார் அமைச்சரவையில், கே.எச்.முனியப்பா, கே.ஜே. ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், ராமலிங்க ரெட்டி, சதீஷ் ஜார்கிஹோலி, கிருஷ்ண பைரே கௌடா, பிரியங்க் கார்கே, யூ.டி.காதர், ஈஸ்வர் காந்த்ரே, யதீந்திர சித்தராமையா, பைரதி சுரேஷ், டாக்டர் ஷரண் பிரகாஷ் பாட்டீல் ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

CM DK Shivakumar

இதற்கிடையே, டி.கே.சிவகுமார் தலைமையிலான அரசு, பல முக்கியத் துறைகளை மூத்த அமைச்சர்களுக்கும் புதியவர்களுக்கும் ஒதுக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிடைத்த தகவல்களின்படி, கே.எச்.முனியப்பாவின் மருமகன் கிருஷ்ண பைரே கௌடாவிடம் பெங்களூரு மேம்பாட்டுப் பிரிவு (பி.எம்.ஆர்.டி.ஏ தவிர்த்து) ஒப்படைக்கப்படலாம் என்றும், ராமலிங்க ரெட்டிக்கு நீர்வளத் துறை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிகிறது. யூ.டி.காதரிடம் சுகாதாரத் துறையும், எம்.பி. பாட்டீல் தொழில்துறைப் பொறுப்பையும், சரண் பிரகாஷ் பாட்டீல் மருத்துவக் கல்வித் துறையையும் கையாள வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.