diwali sale PTI
இந்தியா

தீபாவளி விற்பனையில் புதிய உச்சம்.. இந்தியாவில் ₹7 லட்சம் கோடி வர்த்தகம்.. தமிழ்நாட்டில் எவ்வளவு?

இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையையொட்டி இந்தியாவில் ₹7 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகவும், இது கடந்த ஆண்டைவிட 19% அதிகம் என்றும் CAIT தெரிவித்துள்ளது.

PT WEB

செய்தியாளர்: வெற்றிச்செல்வி

இந்தியாவில் தீபாவளி பண்டிகைக் காலம் வணிகர்களுக்கு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் அதிகளவில் கடைகளில் குவிவார்கள். சிறிய கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை அனைத்திலும் விற்பனை சூடுபிடிக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு பண்டிகைக் கால வர்த்தகம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான CAIT தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு விற்பனை 19 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

diwali sale

கடந்த ஆண்டின் பண்டிகைக் கால வர்த்தகத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், 2025-ம் ஆண்டு பொருட்கள் விற்பனை மற்றும் சேவைகள் இரண்டையும் சேர்த்து மொத்தம் 6 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்றது. கடந்த ஆண்டின் மொத்த வர்த்தக மதிப்பீட்டையும் தாண்டி இந்த ஆண்டு வர்த்தகம் உயர்ந்துள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதில் தலைநகர் டெல்லியில் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக CAIT தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் விற்பனை புதிய உயரத்தைத் தொட்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் ஜவுளித் துறையிலும் பெரிய அளவில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஜவுளித் துறையில் மட்டும் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றுள்ளது. அதேபோல், திருப்பூரின் பின்னலாடைத் துறையிலும் தீபாவளியை ஒட்டி பெரிய அளவில் ஆர்டர்கள் கிடைத்துள்ளன. உள்நாட்டுச் சந்தைக்கான பின்னலாடை ஆர்டர்களின் மதிப்பு மட்டும் சுமார் 8,500 கோடி ரூபாயைத் தொட்டுள்ளது.

கார்கள், இருசக்கர வாகனங்கள், வணிக வாகனங்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது. இதோடு, பட்டாசு விற்பனை மற்றும் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான பேருந்து, ரயில் போக்குவரத்திலும் பண்டிகைக் காலத் தேவை அதிகரித்துள்ளது. அகல் விளக்குகள், அலங்காரப் பொருட்கள், சிலைகள், பூஜைப் பொருட்கள், இனிப்புகள் எனத் தீபாவளிக்குத் தேவையான பொருட்களும் விற்பனையில் இடம்பெற்றுள்ளன.