டெல்லியில் இரு பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவனுக்கு உதவியாக வந்த இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
தென்மேற்கு டெல்லியின் துவாரகா பகுதியில் உல்ள 16ஏ பிரிவில் உள்ள பள்ளிக்கு வெளியே இரு மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சண்டையிட்டு கொண்டிருந்த ஒரு மாணவன், உதவிக்கு அவனது நண்பனை அழைத்துள்ளார். அவரும் சண்டைக்குள் நுழைய மற்றொரு மாணவன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து உதவிக்கு வந்த இளைஞனை சுட்டுள்ளார். ரத்தம் வெளியேறியபடி இளைஞர் சுருண்டுவிழ, சண்டையிட்ட இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இளைஞரை ஆம்புலன்சில் அனுப்பி வைத்துவிட்டு, காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தாரக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காவல்துறை கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கினர். இறந்துபோன இளைஞர் பெயர் குர்ஷித் என்றும் அவருக்கு 19 வயது நிரம்பியதும் தெரியவந்துள்ளது. துப்பாக்கியால் சுட்ட மாணவன் பெயர் சாஹில் என்ற மோனு என விசாரணையில் தெரியவந்தது.
சாஹில் தற்போது கைது செய்ய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் இருந்து துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். தற்போது மாணவன் இளைஞனை கொலை செய்ததை நேரில் பார்த்த சாட்சி கிடைக்காததால், ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தப்பி ஓடிய அந்த மாணவன் வந்து சாட்சியம் அளிக்க வேண்டும் என்பதால் அவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.