புதுச்சேரி மாநில நிர்வாகத்தை முடக்கும் வேலையில் கிரண்பேடி ஈடுபட்டுள்ளதாக, முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, புதுச்சேரியில் மருத்துவக் கல்லூரிகளில் முறைகேடாக சேர்க்கப்பட்ட மாணவர்களை மருத்துவ கவுன்சில் வெளியேற்ற உத்தரவிட்டுள்ளதாகவும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கும் அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் கூறினார். இருந்தபோதிலும் மாணவர்கள் பாதிக்காத வகையில் கல்லூரி நிர்வாகத்தை அழைத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றவர், இந்த விவகாரத்தில் மாநில அரசுதான் காரணம் என ஆளுநர் கிரண்பேடி குற்றம்சாட்டியுள்ளது பொறுப்பற்ற செயல் என்றும், மாநில வளர்ச்சிக்காக கிரண்பேடி இதுவரை எதுவும் செய்யாமல் மாநில நிர்வாகத்தை முடக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும், மாநில அரசைப் பற்றி மத்திய அரசுக்கு தவறான புகார்களை தெரிவிப்பதே கிரண்பேடியின் வேலையாக உள்ளதாகவும், இந்தப் போக்கை அவர் மாற்றிகொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
மத்திய பாஜக அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்ற தவறான நிர்வாக நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடுசெய்யும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியினை மறைமுகமாக உயர்த்தி உள்ளதாகவும் இதனால் அத்தியாவசியப்பொருட்கள் விலை ஏற்றம் அடைந்து பொதுமக்கள் வெகுவாக பாதித்துள்ளதாகவும், மக்களை மறைமுகமாக சுரண்டும் வேலையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது எனவும் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து செய்தியாளார்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி தேர்தல் தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் ராகுல்காந்தி கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்பார் என்றும் அவர் கூறினார்.